Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM

தெலங்கானா அரசியல் நிலைமை: சோனியா தீவிர ஆலோசனை

தெலங்கானா மசோதா நிறைவேறி ஆந்திரப்பிரதேசம் பிரிக்கப்படுவது உறுதியாகி விட்ட நிலையில் இனிமேல் உருவாகும் அரசியல் நிலைமைகளையும் மாற்றங்களையும் எப்படி சமாளிப்பது என்பது பற்றி காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனை தொடங்கியுள்ளது.

தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதால் எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி பதவி விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பதா அல்லது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதா என்பதில் திணறி வருகிறது காங்கிரஸ். தெலங்கானாவுக்கும், ஆந்திர த்துக்கும் 2 முதல்வர்களை அறிவிக்கலாமா என்பதையும் அது ஆராய்கிறது.

ஆந்திரம், தெலங்கானா பிராந்தியங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான கண்ணா லட்சுமி நாராயணா, உத்தம் குமார் ஆகியோரை அழைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

மாநிலத்தைப் பிரிப்பது என்ற கட்சி மேலிடத்தின் முடிவுக்கு எதிராக கிரண் குமார் ரெட்டி கிளர்ந்தெழுந்தபோதே அவருக்கு பதிலாக கண்ணா முதல்வராக அறிவிக்கப்படலாம் என கடந்த சில மாதங்களாகவே பேச்சு நிலவியது. கட்சி மேலிடம் சொல்வதை மீறாத நல்ல பிள்ளை என பேரெடுத்து வருபவர் கண்ணா. அவருடன் சில வாரங்களுக்கு முன்பே மத்திய தலைவர்கள் பேசினர்.

சோனியா காந்தி, வெள்ளிக்கிழமை தெலங்கானா பகுதியைச் சேர்ந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் டி.சீனிவாஸ், அமைச்சர் கீதா ரெட்டி இருவரையும் சந்தித்து பேசி இருக்கிறார். தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் கட்சித் தலைவர்களை நியமிக்கலாமா என்பது உள்ளிட்ட வேறு யோசனைகளும் கட்சிக்குள் அலசப்படுகிறது.

தெலங்கானா தலைவர்களுடன் பேசி சீமாந்திரா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக நியமிக்கலாம் என்ற திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது.

மக்களவை பொதுத் தேர்தலின் போது மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கவுள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்கிற யோசனை மட்டும் வேண்டாம் என்பதே கட்சிக்குள் பெரும்பாலானோர் தெரிவிக்கும் கருத்தாகும். எனவே, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ஒரு தலைவரை தேர்தல் முடியும் வரை முதல்வராக நியமிக்கலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கு மேலும், இரு புதிய மாநிலங்களும் முறைப்படி அமையும் வரை சில தினங்களுக்கு காத்திருப்பது என்பதும் ஒரு யோசனை. இடைக்கால முதல்வராக நீண்ட நாளைக்கு தன்னால் தொடர முடியாது என்பதை ஆளுநரிடம் கிரண்குமார் ரெட்டி ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.

இரு மாநிலத்துக்கும் முதல்வர்களையும், இரண்டு மாநிலத்துக்கும் கட்சித் தலைவர்களையும் நியமித்தால் கிடைக்கக்கூடிய பலன், பாதகத்தையும் கட்சி கணக்கிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x