ரூ.10 கோடி கேட்டு சோனியாவுக்கு நோட்டீஸ்: ம.பி. முதல்வர் அனுப்பினார்

ரூ.10 கோடி கேட்டு சோனியாவுக்கு நோட்டீஸ்: ம.பி. முதல்வர் அனுப்பினார்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா ஆகியோருக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அவரது மனைவி சாதனாசிங் ஆகியோர் திங்கள்கிழமை அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சவுகான் மற்றும் சாதனா சார்பில் அவர்களது வழக்கறிஞர் ஷஷாங் சேகர் அனுப்பி உள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

செய்தித்தாள்கள், இணையதளங்களில் காங்கிரஸ் சார்பில் வெளியான விளம்பரங்களில் சவுகான் குடும்பத்தினர் மீது அவதூறான, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது அவர்களுடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

எனவே, இந்த நோட்டீஸைப் பெற்ற 15 நாட்களுக்குள், ஏற்கெனவே விளம்பரங்கள் வெளியான ஊடகங்கள் மூலமே, சவுகான் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாக விளம்பரப்படுத்த வேண்டும். தவறினால் ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் ம.பி.யில் வரும் 27-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைநகர் போபாலிலிருந்து வெளியாகும் ஒரு இந்தி நாளிதழில் சமீபத்தில் ஒரு தேர்தல் பிரச்சார விளம்பரம் வெளியானது.

அந்த விளம்பரத்தில், சிவராஜ்சிங் சவுகான் வீட்டில் ரூபாய் நோட்டுக்களை எண்ணுவதற்கான எந்திரம் இருப்பதாகவும், மாநில அரசின் பல்வேறு பணி ஒப்பந்தங்களை தனது மைத்துனர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் அதில், சவுகானின் மனைவி சாதனா சிங் மற்றும் அவரது சகோதரர்கள் போலியான தஸ்தாவேஜுகளை பொதுப்பணித் துறைக்கு அளித்துள்ளதாகவும், அதை வைத்து மண் லாரிகளை வாங்கி உள்ளதாகவும் கிண்டலுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் ரூபாய் நோட்டுகளில் சிவராஜ் தன் மனைவியுடன் நிழல் தோற்றத்தில் இருக்கும்படியான படத்தையும் பிரசுரித்துள்ளனர்.

இதுபற்றி ம.பி. மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மானக் அகர்வாலிடம் தி இந்து நாளிதழ் கேட்டபோது, "இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். எங்களிடம் அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. பிஜேபியை போல் ஆதாரம் இல்லாமல் நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்" என பதில் அளித்தார்.

கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குவாலியருக்கு வந்தபோது, அவரைக் கிண்டலடித்து குவாலியர் இந்தி பத்திரிகைகளில் பிஜேபி சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதற்கு நோட்டீஸ் அளிக்காமல் மவுனம் காத்த காங்கிரஸ், இப்போது விளம்பரமாகவே கொடுத்து அவதூறு நோட்டீஸ் பெற்றிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in