Published : 26 Feb 2014 09:00 AM
Last Updated : 26 Feb 2014 09:00 AM
இந்திய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர் வேதத்தை உலக அளவில் பிரபலப் படுத்தவேண்டும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
காந்திநகரில் செவ்வாய்க் கிழமை நடந்த தேசிய ஆயுர்வேத மருத்துவ உச்சி மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஆயுர்வேத மருத்துவமுறையை உலக அளவில் பிரபலப்படுத்த வேண்டும். ஆயுர்வேத மூலிகை மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் சீனா முதல் இடத்தில் இருப்பது நமக்கு சவால் மிக்கதுதான். அந்த மருந்துகளை உலக சந்தையில் விற்க நமக்கும் வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது என்றாலும் அது சவால் மிக்கதே.
பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது எத்தனை நாடுகளுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை நாம் இது வரை எண்ணிப்பார்த்திருக்க மாட்டோம். நேபாளம், தாய் லாந்து, சுமத்ரா, ஜாவா உள்ளிட்ட நிறைய நாடுகள் மூலிகை மருந்துகளை பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் மூலமாக உலக அளவில் ஆயுர்வேதத்தை நம்மால் கொண்டு செல்ல முடியும்.
பல நூற்றாண்டு பழமைவாய்ந்த ஆயுர்வேத மருத்துவச் சுவடிகளை இப்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல்மயமாக்கினால் அவற்றை என்றைக்குமே பாதுகாத்து வைக்கலாம். இதைச் செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவம் சம்பந்தப்பட்ட காப்புரிமை பற்றி நமக்கு விழிப்புணர்வு அவசியம். அறிவுசார் சொத்துரிமை பற்றி ஆயுர்வேத துறையும் சிந்திக்கவேண்டும்.
காப்புரிமையை பதிவு செய்வதில் நமது நாடு மிகவும் பின்தங்கி இருக்கிறது என்பதை சொல்லியே ஆகவேண்டும்.
நமது பொருள்கள் உலகிலேயே மிகச்சிறந்தவை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதால் மட்டுமே நாம் சாதித்துவிட முடியாது. நமது தொழில்நுட்பங்களை பிறர் புரிந்துகொள்ளும் மொழியில் கொண்டு செல்வது அவசியம்.
இப்போதைய நவீன வாழ்க்கையில் அவசர கதியில் இயங்கி நிம்மதியை இழந்து தவிக்கிறோம். இவற்றைச் சமாளித்து இன்பம்,துன்பம் என எல்லாமும் கலந்த வாழ்க்கையை நோக்கி எப்போது நாம் செல்லப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளில் மூலிகை மருந்துகளை மருந்துப்பொருளாக பார்க்காமல் கூடுதல் உணவாக பயன்படுத்துகிறார்கள்.
நாமும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவது நல்லது. நாட்டு மக்களின் சுகாதாரம் பற்றி நாமும் அக்கறை காட்டுவது அவசியம்.
நோயை குணப்படுத்தும் தன்மை ஒவ்வொரு மலருக்குமே இருக்கிறது.அதில் ஒன்றாக திகழும் தாமரை, பலவிதமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டிருக்கிறது என்றார் மோடி.
இந்த நிகழ்ச்சியில் யோகா குரு ராம்தேவ், மாநில அமைச்சர் பர்வத பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT