Last Updated : 07 Jun, 2017 10:08 AM

 

Published : 07 Jun 2017 10:08 AM
Last Updated : 07 Jun 2017 10:08 AM

ஜிஎஸ்எல்வி மார்க்-3 வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகள்

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 640 டன் எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சிக்க லான கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ராக்கெட், ஜிசாட்-19 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது. ராக்கெட் புறப் பட்ட 16.20 நிமிடத்தில் செயற்கைக் கோள் நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரே நேரத்தில் இரண்டு சவாலான முயற்சிகளில் வெற்றிபெற்று இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இந்தியாவில் உள்ள பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங் களின் கடின உழைப்பும் விஞ்ஞானி களின் திறமையும், அடங்கி உள் ளது. அந்த வகையில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 (ஜிசாட்-19) வெற்றிக்கு வித்திட்ட விஞ்ஞானிகளின் விவரங் களைப் பார்ப்போம்.

ஜி.ஐயப்பன் (திட்ட இயக்குநர்):

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டின் திட்ட இயக்குநரான ஜி.ஐயப்பன் இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் எம்.இ படிப்பை முடித்தார். பின்னர், சென்னை ஐஐடியில் எம்.டெக் பட்டம் பெற்றார். 1982-ம் ஆண்டு முதல் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு பணிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

2014-ம் ஆண்டு கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் எல்விஎம் 3 எக்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண் ணில் செலுத்தி திரும்ப பெறும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. வெற்றி வாகை சூடிய அந்த திட்டத்தின் இயக்குநராகவும் ஐயப்பன் பணியாற்றி உள்ளார்.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் திட்டப் பணியின் தொடக் கத்தில் இணை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட இவர் இறுதி கட்ட பணிகளின்போது திட்ட இயக் குநராக நியமிக்கப்பட்டார். இவ ருடைய திறமை திட்டத்தின் வெற் றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

பி.வி. வெங்கட கிருஷ்ணன் (ஐபிஆர்சி இயக்குநர்):

திருவெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ ஏவுகணை உந்துவிசை ஆய்வு மையத்தின் (ஐபிஆர்சி) இயக்குநராக பி.வி.வெங்கட கிருஷ்ணன் பணியாற்றி வருகிறார்.

கேரள மாநிலம் திருச்சூரைப் பூர்விகமாக கொண்ட இவர் கொச்சி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பை முடித்தார். பின்னர் சென்னை ஐஐடியில் இயந்திர பொறியியல் பிரிவில் எம்.டெக் மற்றும் பி.எச்டி பட்டங்கள் பெற்றார். 1983-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக ராக்கெட், செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க்-2 மற்றும் மார்க்-3 போன்ற முக்கியமான ராக்கெட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றி உள்ளார். 2002 முதல் 2010 வரை ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

எஸ்.சோமநாத் (எல்பிஎஸ்சி இயக்குநர்):

திரவ உந்துவிசை எரிவாயு செயல்பாட்டு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக எஸ்.சோமநாத் பணியாற்றி வருகிறார். இவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள டிகேஎம் கல்லூரியில் இயந்திர பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் பிரிவில் தங்கப் பதக்கத்துடன் முதுகலை பட்டம் பெற்றார்.

1985-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் ராக்கெட் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். பிஎஸ்எல்வி திட்டத்தில் அதிக பங்காற்றி இருக்கிறார். மேலும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தின் இயக்குநராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

கே.சிவன் (விஎஸ்எஸ்சி இயக்குநர்):

தமிழ்நாட்டை சேர்ந்த கே.சிவன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் (விஎஸ்எஸ்சி) இயக்குநராக உள்ளார். இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் பிரிவில் முதுகலை பட்டமும் மும்பை ஐஐடியில் பிஎச்டி பட்டமும் பெற்றார்.

1982-ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த இவர், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் திட்ட தயாரிப்பு, வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் முக்கிய பங்காற்றி உள்ளார். 2011-ம் ஆண்டு முதல் ஜிஎஸ்எல்வி திட்டப் பணிகளில் ஈடுபட தொடங்கினார். கிரையோஜெனிக் தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் ராக்கெட்டின் நிலைதன்மை சோதனைகளுக்கு தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x