Last Updated : 01 Oct, 2014 09:42 AM

 

Published : 01 Oct 2014 09:42 AM
Last Updated : 01 Oct 2014 09:42 AM

வகுப்பில் சக மாணவனுடன் பேசியதற்காக நாய்க் கூண்டில் அடைத்து வைத்து 4 வயது குழந்தை 3 மணி நேரம் சித்ரவதை: பள்ளியை மூட கேரள மாநில அரசு உத்தரவு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் 4 வயது குழந்தையை நாய்க் கூண்டில் அடைத்து வைத்து தண்டனை வழங்கிய கொடூரச் செயல் நடைபெற்றுள்ளது. அந்த பள்ளியை மூட கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகே குடப்பனக்குன்னு பகுதியில் ஜவஹர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் சக மாணவருடன் பேசிய குற்றத்திற்காக 4 வயது குழந்தையை, அங்குள்ள காலியான நாய் கூண்டில் கடந்த வியாழக்கிழமை ஆசிரியர் அடைத்து வைத்தார்.

அதைப் பார்த்த, அதே பள்ளியில் படிக்கும் அக்குழந்தையின் அக்கா, பள்ளி முதல்வரிடம் முறையிட்டாள். ஆனால், இந்த சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என்று பள்ளி முதல்வர் சசிகலா மிரட்டினாராம். பின்னர், மூன்று மணி நேரத்திற்குப் பிறகே குழந்தையை கூண்டிலிருந்து விடுவித்துள்ளனர்.

இதையடுத்து, நடந்த சம்பவத்தை அக்குழந்தையின் அக்கா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து பள்ளி முதல்வர் சசிகலாவை போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சமூக நலத்துறை அமைச்சர் எம்.கே.முனீரும், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் ஜே.பி.ஜோஷியும் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையே கல்வித்துறை துணை இயக்குநர் அளித்த அறிக்கையில், வீட்டு வளாகத்தை மாற்றியமைத்து அப்பள்ளி செயல் பட்டு வருவதாகவும், அங்கு அடிப் படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதை யடுத்து அந்த பள்ளியை மூட நடவடிக்கை எடுக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x