Last Updated : 16 Oct, 2014 10:18 AM

 

Published : 16 Oct 2014 10:18 AM
Last Updated : 16 Oct 2014 10:18 AM

முதுகில் குத்திவிட்டது பாஜக: சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

சட்டசபைத் தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம் எங்கள் முதுகில் குத்திவிட்டது பாஜக என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் உத்தவ் தாக்கரே நேற்று வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எங்களின் உதவி தேவைப்பட்டபோது கூட்டணி அமைத்தது பாஜக. தேவை நிறைவேறியதும், தற்போது கூட்டணியை முறித்துவிட்டு தனியாக போட்டியிடுகிறது.

அதே போன்றுதான் ஹரியாணா மாநிலத்தில் ஹரியாணா ஜான்கித் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிஷ்னோயையும் அக்கட்சி நடத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர்கள், ஹரியாணாவின் அடுத்த முதல்வர் பிஷ்னோய்தான் என்று பேசியுள்ளனர். அதற்கான ஆடியோ சி.டி. ஆதாரம் என்னிடம் உள்ளது. தற்போது, அந்த மாநிலத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட்டுள்ளது.

பாஜக எங்கள் முதுகில் குத்தியதற்கான காரணம் என்ன? இக்கேள்விக்கு அவர்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

சிவசேனா கட்சிக்கு மக்கள் பேராதரவு அளித்துள்ளனர். பால் தாக்கரேவை மனதில்வைத்து சிவசேனாவுக்கு மக்கள் வாக்களிப் பார்கள். அடுத்த ஆட்சியை சிவசேனா கட்சி அமைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் நான் பேசியதில்லை. அவர் மீது மரி யாதை வைத்துள்ளேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

பாஜக சாடல்

இதனிடையே சிவசேனா கட்சியின் பத்திரிகையொன்றில் பிரதமர் மோடியையும், அவரது தந்தையையும் விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூரில் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, “பிரதமரையும், அவரின் குடும்ப பின்னணியையும் அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்றார். பாஜக மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் தேவேந்திர பட்நவிஸ் கூறும்போது, “சிவசேனா கட்சியின் இச்செயலுக்கு, இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். சிவசேனா இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்வது தவறான செயலாகும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதுதான் மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சாரமாகும்” என்றார்.

மோடி மீதான விமர்சனம் குறித்து சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஹர்ஷல் பிரதான் கூறும்போது, “மோடி மீது உத்தவ் தாக்கரே மரியாதை வைத்துள்ளார். கட்டுரையில் மோடிக்கு எதிராக வெளியான கருத்துக்கும், உத்தவ் தாக்கரே வுக்கும் சம்பந்தமில்லை” என்றார்.

நான் முதல்வராவேன்!

தனது கட்சிப் பத்திரிகையான `சாம்னா'வுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தாக்கரே குடும்பத்திலிருந்து யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை என்பது உண்மைதான். அதே சமயம் பொறுப்புகளை ஏற்பதிலிருந்து நாங்கள் பின்வாங்கியதில்லை. டீ விற்பனை செய்த மோடியால் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், என்னால் முதல்வராக முடியும்.

பாஜக சார்பில் ஏராளமான மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் யாரும் இங்கு வரமாட்டார்கள். சிவசேனா கட்சிதான் இங்குள்ள மக்களுக்கு சேவை செய்யும். இதை மக்கள் உணர வேண்டும். அதிகாரப் பசி காரணமாக, எங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டால், மகாராஷ்டிராவை இரண்டாகப் பிரிக்க முயற்சிக்கும். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெற விடமாட்டோம். இவ்வாறு உத்தவ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x