Last Updated : 13 Oct, 2014 04:05 PM

 

Published : 13 Oct 2014 04:05 PM
Last Updated : 13 Oct 2014 04:05 PM

சசி தரூரின் கட்சிப் பொறுப்பு பறிப்பு: காங்கிரஸ் நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வருவதற்காக, தமது கட்சி எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து சசி தரூர் பெயர் நீக்கப்பட்டது.

‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்திற்கு நாட்டின் தலைவர்கள், பிரபலங்கள் என்று மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதில் சசி தரூரும் ஒருவர். மோடியின் இந்த அழைப்பை ஏற்றதற்காக கேரளா மாநில காங்கிரஸ் கமிட்டி சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரை செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி நீக்கியுள்ளார்.

சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறையாகும். இப்போதைக்கு, இவர் வெளியுறவு விவகாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக சசி தரூர் நீடிக்கிறார்.

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றதற்குக் காரணமாக அவர் கூறும்போது, “30 ஆண்டுகாலமாக நான் எழுதியவை இந்தியாவைப் பற்றிய எனது கருத்தை பறைசாற்றும், மேலும் இந்தியாவின் பன்மைத்துவக் கலாச்சாரத்தின் மீது எனக்கு ஆழமான நம்பிக்கை உள்ளது.

பாஜக தலைவர்களின் அறிக்கைகள் அல்லது செயல் அழைப்புகளுக்கு நான் செவிமடுப்பதால் இந்துத்துவா நான் ஏற்கிறேன் என்று ஒரு போதும் அர்த்தமாகாது.

தூய்மை இந்தியா நம் அனைவருக்கும் பயனுள்ளது. பிரதமரின் இத்திட்டத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதே வேளையில், அக்டோபர் 2ஆம் தேதிக்குப் பிறகு துடைப்பத்தை கையில் எடுக்காமல், அன்றைய தினம் வெறும் புகைப்படத்திற்காக துடைப்பத்தை எடுக்கும் குறியீட்டுச் செயலாகவும் இது சீரழியும் நிலை குறித்தும் நான் கவலைப்பட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.

தேசக் கட்டுமானத்தில் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கும் மோடியின் திட்டம் அவ்வளவு எளிதில் உடைக்கப்படக்கூடியதல்ல என்று மோடி பிரதமராகப் பதவியேற்ற தருணத்தில் பாராட்டிய சசி தரூர், அவரது சமீபத்திய அமெரிக்க விஜயத்தையும் வெகுவாகப் புகழ்ந்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் அவர் மீது அதிருப்தியைத் தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x