Last Updated : 27 Jan, 2014 06:13 PM

 

Published : 27 Jan 2014 06:13 PM
Last Updated : 27 Jan 2014 06:13 PM

கேஜ்ரிவாலை எதிர்த்து எம்.எல்.ஏ. பின்னி 4 மணி நேரம் உண்ணாவிரதம்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி, டெல்லி அரசை எதிர்த்து திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால், நான்கு மணி நேரமே ஆகியிருந்த நிலையில் அண்ணா ஹசாரேவின் அறிவுரையை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக திடீரென அறிவித்தார்.

கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்த லட்சுமி நகர் தொகுதி எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக புகார் கூறிய பின்னி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். முன்னதாக, மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்குச் சென்று பின்னி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு, டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் பின்னியும், அவரது ஆதரவாளர்கள் 300 பேரும் போராட்டத்தை தொடங்கினர்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “அண்ணா வின் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கேஜ்ரிவால் தவறி விட்டார். பெண்கள் பாதுகாப்பு அமைப்பு, மின் கட்டண குறைப்பு, நாள் ஒன்றுக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் ஆகிய திட்டங்களை அவர் நிறைவேற்றவில்லை.

இதை கண்டித்து போராட்டத்தை தொடங்கியுள் ளேன். எனினும், பொது நலன் சார்ந்த பிரச்சினைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்” என்றார்.

போராட்டம் தொடங்கி நான்கு மணி நேரம் ஆகியிருந்த நிலையில், அண்ணா ஹசாரேவின் அறிவுரையை ஏற்று போராட்டத்தை கைவிடுவதாக பின்னி அறிவித்தார். வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே கூறியதாக பின்னி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பின்னி கூறியதாவது: “மாநில சட்டத் துறை அமைச் சர் சோம்நாத் பாரதி மீது நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லியின் துணைநிலை ஆளுநரிடம் காலையில் புகார் தெரிவித்தேன். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

அதன் பின், எனது போராட்டம் குறித்து சமூக சேவகர் அண்ணா ஹசாரேவிடம் பேசினேன். நான்கு நாள் போராட்டம் செய்வதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விட்டு பிறகு உண்ணாவிரதம் இருந்தால் பயன் இருக்கும் என ஹசாரே தெரிவித்தார்.

எனவே, கேஜ்ரிவாலுக்கு மேலும் பத்து நாட்கள் அவகாசம் தர முடிவு செய்துள்ளேன். அதற்குள் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கும், டெல்லி வாசிகளின் கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பிப்ரவரி 6-ம் தேதி முதல் பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன்” என்றார்.

உண்ணாவிரதம் மேற்கொண்ட வினோத்குமார் பின்னி

பின்னிக்கு கேஜ்ரிவால் பதில்

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வரும் பின்னிக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: “ஒரு மாதத்தில் வேறு எந்த அரசும் செய்யாத பணிகளை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் செய்துள்ளது. ஆம் ஆத்மி அரசை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களுக்காகச் செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x