Published : 28 Jan 2014 09:16 AM
Last Updated : 28 Jan 2014 09:16 AM

மகாராஷ்டிரத்தில் சுங்கச் சாவடிகள் மீது எம்.என்.எஸ். தொண்டர்கள் தாக்குதல்: அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (என்.என்.எஸ்.) கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறி, அக்கட்சி சார்பில் ஏற்கெனவே போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், யாரும் சுங்கவரி கட்ட வேண்டாம். யாராவது எதிர்த்துக் கேட்டால், தாக்குங்கள் என அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தார்.

இதனால், ஆவேசத்துடன் பொங்கியெழுந்த தொண்டர்கள் வீதிகளில் இறங்கி வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாணே மாவட்டத்தில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 12 சுங்கச் சாவடி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய எம்.என்.எஸ். சட்டமன்ற உறுப்பினர் பிரவீண் தாரேகர் தலைமையிலான 25 பேரை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர்.

கல்யாண் நகர் பகுதியில் எம்.எல்.ஏ. பிரகாஷ் போய்ர் தலைமையிலானோர் தாக்குதலை நடத்தினர். இவர்கள் அனைவரின் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நாசிக் நகரில் இருந்த இரண்டு சுங்கச் சாவடி மையங்களை முற்றுகையிட்டு எம்.எல்.ஏ. வசந்த் கீதே தலைமையிலான தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பிருதிவிராஜ் சவாணை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக் ராவ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்ததாகத் தெரிவித்தார்.

மலிவான விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற தாக்குதலை ராஜ் தாக்கரே தூண்டி விடுகிறார் என்று மத்திய அமைச்சர் தாரிக் அன்வர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் பிருதிவிராஜ் சவாண் கூறியதாவது: “சுங்க வரி வசூல் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லை. இதை நிர்வகிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். அதே சமயம், சுங்க கட்டண வசூலை தடுத்ததால், புதிய சாலைகளை அமைக்கும் பணி பாதிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x