Published : 13 Mar 2014 02:20 PM
Last Updated : 13 Mar 2014 02:20 PM
நாட்டின் அணுசக்தி தேவை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் வலியுறுத்தி உள்ளார்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குள்ளானதன் மூன்றாவது ஆண்டு நினைவை முன்னிட்டு, கிரீன்பீஸ் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரஷாந்த் பூஷண் கூறியதாவது:
மூன்று மைல் தீவில் நடைபெற்ற அணு உலை விபத்துக்குப் பின் 1979-ல், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்திற்கு பின் 1986-ல் என 2 முறை மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இதன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டும் அவை அமல்படுத்தப்படவில்லை.
இதை இந்திய அணுசக்தித் துறையின் தலைவராக ஏ.கே.கோபாலகிருஷ்ணன் வந்தபின் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்வு செய்ய அவர் 1993-ல் அமைத்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் அதுவும் அமல்படுப்பத்தப்படவில்லை.
இதற்கு அந்த ஆய்வுக்குழுக்கள் அமைத்த ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்குவது ஒரு முக்கியக் காரணம். இந்த ஆணையத்தை தனியாகப் பிரித்து சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தந்தும் பயனில்லாமல் உள்ளது.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு இதுவரை கூடங்குளம் அணுமின் நிலையம் மீதான பொது மக்கள் பாதுகாப்பு, நிதி ஒதுக்கீடு, விபத்து இழப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை குறித்து ஒரு சுதந்திரமான ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அரசு மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளின் கீழ் வராத நிபுணர்களை இந்தக் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கிரீன்பீஸ் சார்பில் புகுஷிமா சென்று ஆய்வு செய்து திரும்பிய பூவுலக நண்பர்கள் அமைப்பின் ஜி.சுந்தர் ராஜன் கூறுகையில், "புகுஷிமா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரை சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவரான புட்டபா நகர மேயர் இடகோவா கொடுத்த தகவல் மிகவும் அதிர்ச்சியானவை.
ரஷ்யா தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு எனவும் செர்னோபில் போன்ற விபத்து புகுஷிமாவில் நடக்காது என்றும் ஜப்பான் அரசு உறுதி கூறியது. ஆனாலும் விபத்து நடந்தது. அனைத்து அரசுகளும் மக்கள் சார்பாக இன்றி அணு உலை நிறுவனங்கள் சார் பாகவே இயங்குவதாகக் கூறிய அவர், இந்தியாவில் எங்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்தார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT