Published : 21 Mar 2014 10:37 AM
Last Updated : 21 Mar 2014 10:37 AM

பாஜகவின் அதீத நம்பிக்கை தேர்தலில் பலன் தராது: சரத் பவார் கருத்து

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று பாஜகவும், அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அதீதநம்பிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தேர்தல் முடிவு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்காது என்று மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியத் தலைவரான அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளது:

2004-ம் ஆண்டில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் பாஜக அதீதநம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரம் செய்து தோல்வியடைந்தது. இப்போது மீண்டும் அதேபோல அவர்களது பிரசாரம் அமைந்துள்ளது. பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்துவிட வேண்டுமென்று பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கியக் கட்சியான காங்கிரஸ் மேலும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

தேர்தல் பிரசாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக அளித்து வரும் சவாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எவ்வாறு எதிர்கொள்ள இருக்கிறது என்ற கேள்விக்கு சரத் பவார் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

நாட்டில் மோடி அலை வீசுகிறது என்பது முற்றிலுமாக நிராகரித்த அவர், ஒரு தனிநபரின் பிரசாரம் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. பாஜகவினர் மட்டுமீறிய நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இவ்வாறு செயல்பட்டுதான் பாஜக தோல்வியடைந்தது. அப்போது வாஜ்பாய் அடுத்த பிரதமர் என்று முன்னிறுத்தப்பட்டார். ஆனால் மன்மோகன் சிங் பிரதமரானார் என்று தெரிவித்தார்.

தான் பிரதமராக வாய்ப்புள்ளது என்பதை திட்டவட்டமாக மறுத்த சரத் பவார், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் எங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இந்த சூழ்நிலையில் நான் பிரதமராவேன் என்று கூறுவது ஒரு சரியான சிந்தனையாக இருக்காது என்றார்.

மோடி பிரதமரானால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, தனிநபர்களை பற்றி பேசுவது சரியாக இருக்காது. மோடியை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டின் உயரிய பதவிக்கு தகுதியானவர்தானா என்று உறுதியாகக் கூற முடியாது. காங்கிரஸ் கூட்டணி அல்லது பாஜக கூட்டணி இல்லாமல் வேறு கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன்.

கட்சி சார்பின்றி நடுநிலையாக வாக்களிக்கக் கூடியவர்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறார்களோ அவர்களே இத்தேர்தலில் வெற்றிபெற முடியும். அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. ஆனால் அவர்கள் கட்சி தொப்பி அணிந்தவர்கள் பலரை இப்போது பார்க்க முடிகிறது என்று சரத் பவார் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x