Last Updated : 13 Oct, 2014 11:03 AM

 

Published : 13 Oct 2014 11:03 AM
Last Updated : 13 Oct 2014 11:03 AM

பிரதமர் பதவியின் கவுரவத்தை குலைக்கிறார் நரேந்திர மோடி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றச்சாட்டு

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது தாக்குதல் நடத்தி பிரதமர் பதவிக்கான கவுரவத்தை நரேந்திர மோடி குலைத்து வருகிறார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் பேசியபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கடிகாரம் அக்கட்சியினரின் ஊழலைக் காட்டுவதாகக் கூறினார்.

மேலும் சரத் பவாரும், அவரது அண்ணன் மகன் அஜித் பவாரும் பாராமதி தொகுதி மக்களின் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தி அவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் சரத் பவார் நேற்று பேசும்போது, “பிரதமர் பதவியின் பெருமை மற்றும் கவுரவத்தை காக்க வேண்டியது அப்பதவியில் இருப்பவரின் கடமை. ஆனால் அதன் கவுரவம் காக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பிரதமர் பதவியில் இருப்பவரால் அப்பதவியின் கவுரவமும், பொது விவாதத்தின் தரமும் குறைந்து வருகிறது” என்றார்.

சரத் பவார் மேலும் கூறும்போது, “மோடி நாட்டின் பிரதமராகவே அமெரிக்கா சென்றார். பாஜக தலை வராக அல்ல. அவரது அமெரிக்க உரைகளையும் படங்களையும் மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பயன்படுத்துவது துரதிருஷ் டவசமானது. இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம்.

மோடி பிரதமராக பதவியேற்று சில மாதங்களே ஆவதால் அவரது செயல்பாடுகளை மதிப் பிடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. என்றாலும் முக்கியப் பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் முழுநேர பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும். இதன் மூலம் எல்லையில் நமது ராணுவத்தினரின் மன உறுதி அதிகரிக்கும்.

தனது கட்சிக்காக பிரச் சாரம் செய்யும் உரிமை எல்லா அரசியல்வாதிக்கும் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் மாநிலப் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்த வேண்டும்.

எல்லைப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x