Published : 25 Sep 2013 08:33 AM Last Updated : 25 Sep 2013 08:33 AM
புதுச்சேரியில் இரு சமூகத்தினரிடையே மோதல்: போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
புதுச்சேரி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்டது பண்டசோழநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இங்கு வன்னியர் சங்கத்தினர், இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பதாகை (பேனர்) வைத்திருந்தனர். அதன் அருகே காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் பதாகைகளும் இருந்தன.
திங்கள்கிழமை இரவு வன்னியர் சங்கத்தினர் வைத்திருந்த பதாகை கிழிக்கப்பட்டிருந்தது. இதை காலனிப் பகுதியினர் கிழித்திருப்பார்கள் எனக்கருதி இரு சமூகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பதாகை கிழிக்கப்பட்டதைக் கண்டித்து பண்டசோழநல்லூர், கல்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட பின்பு, அங்குள்ள கடைகளை ஒருதரப்பினர் மூடக் கோரினர். இதற்கு ஒரு தரப்பினர் மறுத்துள்ளனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே தாக்குதல் மூளும் சூழல் ஏற்பட்டது. நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் பத்துக்கும் குறைவான போலீஸார் மோதலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எதிர் எதிரே நின்றபடி இருதரப்பினரும் கல்வீசி தாக்குதலைத் தொடங்க முற்பட்டனர். இதனால் ஆய்வாளர் ஜெயராமன் மோதலைக் கட்டுப்படுத்த தனது துப்பாக்கியால் வானை நோக்கி ஆறு முறை சுட்டு எச்சரித்தார். இதையடுத்து இருதரப்பினரும் தங்கள் பகுதிக்குத் திரும்பினர்.
சிறிது நேரத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இருப்பினும் சிலர் கல்வீச்சில் தொடர்ந்து ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
எஸ்பி உத்தரவுப்படி குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் 25-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் காலனி பகுதிக்குள் எஸ்.பி. தலைமையில் போலீஸார் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் துணை ஆட்சியர் மாணிக் தீபக் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, "பிரச்சினை தொடர்பான இப்பகுதியை பார்வையிட்டேன். அனைத்து விவரங்களையும் ஆட்சியரிடம் தெரிவிப்பேன்" என்றார். எஸ்.பி. தெய்வசிகாமணி இதுபற்றி கருத்து கூற மறுத்து விட்டார்.
இதுதொடர்பாக காலனி மக்கள் தரப்பில் கேட்டபோது, "இப்பகுதியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியான பிரச்சினை ஏற்பட்டது. இங்கு வன்னியர், ரெட்டியார், தலித், முதலியார் என அனைத்து தரப்பினரும் அமர்ந்து பேசி இங்கு கட்சி பதாகைகள் வைக்கலாம். ஆனால், கொடி கம்பம் வைக்க வேண்டாம் என முடிவு எடுத்தோம். தற்போது வன்னியர் சங்கத்தின் சார்பில் கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பதாகை கிழிக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குத் தொடர்பில்லை. எப்போதும் ஊர் மக்களே பேசி தீர்த்துக்கொள்வோம். இவ்விஷயத்தில் வெளியூர் தரப்பு ஆட்கள் தலையிட்டதால் விவகாரம் பெரிதாகியுள்ளது" என்றனர்.
பிற்பகலில் அப்பகுதியில் ஓரளவு அமைதி திரும்பியது. தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
WRITE A COMMENT