Published : 24 Dec 2013 11:07 AM
Last Updated : 24 Dec 2013 11:07 AM
தமக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லி முதல்வருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதல்வராக பொறுப்பேற்க உள்ள கேஜ்ரிவாலுக்கும் இசட் பாதுகாப்பு வழங்குவது குறித்து டெல்லி மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் வி. ரங்கநாதன் திங்கள்கிழமை கடிதம் எழுதி இருந்தார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவால் எழுதியுள்ள பதில் கடிதத்தில், பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததற்கு நன்றி. ஏற்கெனவே கூறியுள்ளபடி எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை. இறைவனே எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு" என கூறியுள்ளார்.
மேலும், அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் ஏற்கெனவே டெல்லியில் சொந்த வீடு இருந்தால் அரசு இல்லம் ஒதுக்கப்பட மாட்டாது எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இவர்கள் அனைவருமே அரசியலுக்கு புதியவர்கள் மற்றும் முதன் முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களது உரிமைகள், நடவடிக்கைகள் தொடர்பாக பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆரவாரம் இல்லை
பொதுவாக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரை சந்திப்பதற்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் படை சூழ அணிவகுத்துச் செல்வது வழக்கம். ஆனால், எவ்வித ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இன்றி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் எளிமையான முறையில் ஆளுநரை சந்திக்க சென்றது வித்தியாசமாக இருந்தது.
டெல்லி துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்காக திங்கள்கிழமை தனது நீலநிற வேகன் ஆர் காரில் கெஜ்ரிவால் புறப்பட்டார். அவருடன் மணிஷ் சிசோதியா உட்பட இரண்டு தலைவர்கள் மட்டுமே இருந்தனர். ஊடகங்கள் தவிர, வேறு யாரும் அவர்களது காரை பின் தொடரவில்லை.
கெஜ்ரிவால் கார், மற்ற வாகனங்களுடன் ஆங்காங்கே சிக்னல்களில் மிகச் சாதாரணமாக நின்றது. அப்போது, அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பொதுமக்கள், போட்டோ எடுத்தும், கைகளை குலுக்கியும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து கொண்டனர். இதுபோல், மக்களுடன் ஒன்றாகக் கலந்து இருந்து டெல்லியை ஆட்சி செய்வதையே கெஜ்ரிவால் விரும்புகிறார்.
ஆட்சியாளர்கள் யாரும் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்குகளைப் பொறுத்தக் கூடாது என்பதை ஆம் ஆத்மி கட்சி கொள்கையாகக் கொண்டுள்ளது. உடைகள் அணிவதிலும் கெஜ்ரிவால், மற்ற அரசியல்வாதிகளைப் போல் தனியாக எந்த ஒரு பாணியையும் கடைப்பிடிப்பதல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் சிவப்பு விளக்கு வாகனத்தை தவிர்த்து, தனது சாதாரண காரில் அலுவலகம் செல்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
பதவியேற்பு விழா எங்கே?
லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் துவங்கிய போராட்டத்தை ராம்லீலா மைதானத்திலும் தொடர்ந்தார் கெஜ்ரிவால். இதன் நினைவாக, இவ்விரண்டில் ஏதாவது ஒரு இடத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த விரும்புகிறார். இதற்கு ஆளுநரிடம் அனுமதி கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் தேர்தல் வாக்குறுதிப்படி, டிசம்பர் 29-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விரும்புகிறார் கெஜ்ரிவால். அமைச்சரவையில் தொடக்கத்தில் ஆறு அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர். இதில், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்தியவர்களுடன் ஒரு பெண்ணும் அடங்குவர் எனத் தெரிகிறது. இவரது கட்சியில் மொத்தம் மூன்று பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT