Published : 05 Oct 2014 10:00 AM
Last Updated : 05 Oct 2014 10:00 AM
பாஜகவின் வெற்றியை உறுதி செய்யுங்கள் என்று மகாராஷ்டிர மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் பிரதமர் மோடி பேசியதாவது:
15 ஆண்டு கால காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் பெற்றது என்ன? மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்ததா? விவசாயிகள், இளைஞர்கள், தலித்கள், பழங்குடியினர், பெண்கள் என யாராவது பயன் அடைந்தார்களா? இல்லை நகரங்கள், கிராமங்கள்தான் பயன் அடைந்தனவா?
குஜராத்தைவிட மகாராஷ்டிரம் சிறப்பாக உள்ளதாக அவர்களால் கூறமுடியுமா? இவர்கள் தேசியவாதிகள் இல்லை. ஊழல்வாதிகள். உங்கள் நிலத்தை அபகரிப்பவர்கள் உங்களுக்குத் தேவையா? இவர்களிடம் இருந்து மாநிலத்தை விடுவியுங்கள். பாஜக வெற்றியை உறுதி செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்ளவே இங்கு வந்தேன். மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரம் காப்பாற்றப்பட வேண்டும். இம்மாநிலத்தின் வளர்ச்சியை நீங்கள் விரைவுபடுத்த முடியும். இதற்கு இங்கு பாஜக அரசு அமையவேண்டும்.
60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். 60 மாதங்களில் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.
மகாராஷ்டிரத்தில் சீனா தொழிற்பூங்கா அமைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்துக்கு ஜப்பான் உதவியளிக்கும். இவற்றின் மூலம் இம்மாநிலம் வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாநிலத்தின் கனவுகள் நிறைவேறும்.
இவ்வாறு மோடி கூறினார்.
முன்னதாக ஹரியாணா மாநிலம் கர்னால் என்ற இடத்தில் மோடி பேசும்போது, “இன்று உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்க்கின்றன. இதற்கு நான் காரணமில்லை. மத்தியில் வலுவான மற்றும் நிலையான அரசு அமைத்த 125 கோடி மக்களின் சக்தியே இதற்கு காரணம். இதுபோல் ஹரியாணாவின் பெயரும் உலகம் முழுக்க எதிரொலிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கு காங்கிரஸ் இல்லாத ஹரியாணா, பெரும்பான்மை பெற்ற நிலையான அரசு, இந்த மோடியின் திட்டங்களை செயல்படுத்தும் அரசு ஆகிய 3 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
எழுத்தறிவு, தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி என பலவற்றில் ஹரியாணா பின்தங்கியுள்ளது. மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல, பாஜக தனித்து ஆட்சியமைக்கும் வகையில் ஒருமித்த ஆதரவு தாருங்கள்” என்றார்.
ஹரியாணா மாநிலத்தின் கர்னால், மகாராஷ்டிர மாநிலத்தின் பீட், அவுரங்காபாத், மும்பை ஆகிய 4 இடங்களில் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். இது தவிர 2 மாநிலங்களிலும் இன்னும் 28 கூட்டங்களில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டவுள்ளார். இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் 19 கூட்டங்களிலும் ஹரியாணாவில் 9 கூட்டங்களிலும் மோடி பேசவுள்ளார்.
மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின்கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் 2 மாநிலங்களிலும் தலா 15 கூட்டங்களில் பேசுகின்றனர்.
இவர்கள் தவிர பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் பிரச்சாரத்தில் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT