Published : 26 Sep 2016 05:50 PM
Last Updated : 26 Sep 2016 05:50 PM
‘ரத்தமும், நீரும் ஒன்றாக ஓட முடியாது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தாத வரை சிந்து நதிநீர் பங்கீட்டு ஆணைய பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட சீராய்வு குழு கூட்டம் நடந்தது. இதில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.
யூரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. குறிப்பாக போர் தொடுக்காமல் ராஜாங்க ரீதியில் நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இரு நாட்டுக்கும் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்ததத்தை மத்திய அரசு ரத்து செய்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி தர வேண்டும் எனவும், இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்திருந்தார்.
இந்த ஒப்பந்தம் காரணமாக ஜம்மு காஷ்மீரில் வேளாண் பணிகளுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை என்றும் இதனால் இந்திய விவசாயிகள் அவதிக்கு ஆளாகி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
மத்திய வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப்பும், ‘‘இத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்ந்து நீடிக்க பாகிஸ்தான் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு அவசியம்’’ என தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக உயர்மட்ட சீராய்வு குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் எஸ்.ஜெய்சங்கர், நீர்வளத் துறை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் மூத்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எழும் சர்வதேச சட்ட சிக்கல்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
ஒப்பந்த அம்சங்கள்
இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது.
குறுக்கீடும் சீனா?
சிந்து நதி சீனாவில் இருந்து பாய்ந்து வருவதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்பட்சத்தில் அந்நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு நெருக்கடி எழலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர பிரம்மபுத்திரா நதியின் கட்டுப்பாடும் சீனா வசமே உள்ளது. பாகிஸ்தான் தனது நெருங்கிய கூட்டாளி என்பதால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு நதிகளையும் பாயவிடாமல் சீனா முடக்கி வைத்தால் நமது நாட்டின் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். தவிர பிரம்மபுத்திரா நதியின் கடைமடை பகுதியான வங்கதேசத்திலும் பெரும் இழப்பு ஏற்படலாம்.
ஏற்கெனவே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா 11 பெரிய அணைகளை கட்டி வைத்து, இந்தியாவுக்கு பாதிப்பை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT