Last Updated : 18 Oct, 2014 08:36 AM

 

Published : 18 Oct 2014 08:36 AM
Last Updated : 18 Oct 2014 08:36 AM

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: வழக்கை தாமதிக்கக் கூடாது என நிபந்தனை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையே நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “அதிமுக-வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்ற னர். என் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் ஒப்பிடக் கூடாது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிட்டார்.

தலைமை நீதிபதி தத்து, “இந்த வழக்கு 18 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். அதேபோல், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீடும் இழுத்தடிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஃபாலி எஸ்.நாரிமன், “இதற்கு முன்பு இருந்த நிலை வேறு. இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்பதற்கு நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறேன். நீதிமன்றம் என்ன நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்கத் தயார்” என்று வாதிட்டார்.

ஒரு நாள் கூட அவகாசம் தர மாட்டோம்

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாக அறிவித்தனர். அதற்குள் மேல் முறையீட்டு வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்கு மேல் ஒரு நாள் கூட அவகாசம் தர மாட்டோம். மீறினால், இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும். அதன் பிறகு மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகளை விமர்சித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்காது என்றும், ஜெயலலிதா இரண்டு மாதங்கள் வீட்டிலேயே இருப்பார் என்றும் உத்தரவாதம் அளித்தார்.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது தண்டனையையும் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் நான்கு பேரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் திருப்திக்கு இணங்க, இரண்டு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

நேற்று முன்தினம் முதல் பரபரப்பு

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தொடர்பாக நேற்று முன்தினம் முதலே பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேற்று முன்தினம் இரவு இந்த மனு எந்த நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வருகிறது என்பதில் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வந்தது. இறுதியில், தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது என்ற விவரம் இரவு 8 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தெரிந்துகொள்ள ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குவிந்ததால், நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. அதிமுக ஆதரவு வழக்கறிஞர்கள் பலர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்து தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த வண்ணம் இருந்தனர். ஜாமீன் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x