Published : 24 Feb 2014 09:45 AM
Last Updated : 24 Feb 2014 09:45 AM
நம் நாட்டு அரசுகளை நடத்துவது ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
ஹரியாணா மாநிலம் ரோதக் நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த பின்னர் கேஜ்ரிவால் கூறியதாவது:
ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அம்பானி மீது வழக்கு பதிவு செய்தபோது, பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட பலரும் நின்று அதைச் செய்ய முடியாது என கூறினார்கள். இவ்வாறு கூற காரணம் என்ன? அவருக்கும் உங்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானத்தில் உலா வருகிறார்கள். தொடக்க காலத்தில் தேநீர் கடை வைத்திருந்ததாகக் கூறப்படும் மோடிக்கு ஹெலிகாப்டரும் விமானமும் கிடைத்தது எப்படி? இவை முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என பலரும் கூறுகின்றனர்.
இது உண்மை எனில், மோடி வெற்றி பெற்றால், இயற்கை எரிவாயுவின் விலையை எட்டிலிருந்து பதினாறு டாலராக உயர்த்தி விடுவார்.
மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஐம்பது கோடி செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மோடி தனது இமேஜை உயர்த்த நானூறு கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்தப் பணம் அனைத்தும் முகேஷ் அம்பானி தருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.
மோடிக்கும் ராகுலுக்கும் முகேஷ் அம்பானியே பணம் செலவு செய்கிறார். அவரது ஒரு சட்டை பையில் மோடியும் மற்றொரு பையில் ராகுலும் உள்ளனர். இந்த நாட்டின் அரசுகளை முகேஷ் அம்பானியே நடத்துகிறார். இவருக்கு தைரியமாக சவால் விட முன்வந்த ஒரே அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி.
அரசியலிலிருந்து விலகத் தயார்
எங்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது எனக் கூறுகிறார்கள். டாடா மற்றும் ரிலையன்சுக்கு மானியம் தந்தால் யாரும் கேட்க மாட்டார்கள். ஏழைகளுக்கும் சமூகத்தில் பின்தங்கியவர் களுக்கும் மானியம் அறிவித்தால் அதைக் குறை கூறுகிறார்கள்.
டெல்லியில் ஒன்றரை மாத ஆட்சியில் நாங்கள் செய்தது போல் வேறு எந்தக் கட்சியாவது செய்துவிட்டால் நான் அரசியலிலிருந்தே விலகத் தயார். நான் ஆட்சி செய்ய முடியாமல் ஓடி விட்டதாக பாரதிய ஜனதா கூறுகிறது. ஆனால், எங்கள் கட்சிக் கொள்கைகளின்படி ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரசும், பாஜகவும் முட்டுக்கட்டை போட்டதால்தான் நான் ராஜினாமா செய்தேன்.
நீங்கள் ஹரியாணாவின் பத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களிடம் கட்சி நிதி அதிகம் இல்லை என்பதால் இந்த துண்டறிக்கைகளை நீங்கள் நகல் எடுத்து விநியோகிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT