Published : 27 Mar 2014 12:00 AM
Last Updated : 27 Mar 2014 12:00 AM
கருப்புப் பணம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துவிட்டது.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் தொடர்பாக விசாரணை நடத்தவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கவும் ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் தலைமையிலான விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய், மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் வாதாடுகையில், “கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான நடைமுறை ஒன்றை ஏற்கெனவே மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. எனவே, கருப்புப் பணம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கருப்புப் பணத்தை மீட்டு கணக்கில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க 2011-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது.
இதுவரை வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவோ, அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பணத்தை மீட்டால், நாட்டின் பொருளாதாரம் உயரும். தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.
நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் கருப்புப் பணம் மீட்கப்படவில்லை. மத்திய அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டது. நீங்கள் (மத்திய அரசு) உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்பது மிகவும் அவசியம். எனவே, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதற்கான உத்தரவைத் திரும்பப் பெற முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT