Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM
மைசூரை ஆண்ட உடையார் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மகாராஜாவான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பெங்களூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார். மைசூர் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். புதன்கிழமை மாலை அவரது உடல் மைசூரில் ராஜமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கி.பி.1399-ஆம் ஆண்டு முதல் மைசூர் சமஸ்தானத்தை யது வம்சத்தைச் சேர்ந்த உடையார் அரசர்கள் ஆண்டு வருகின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு மைசூர் சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட போதும், உடையார் அரசர்கள் ராஜ மரியாதையுடன் ஜனநாயக தேசத்தில் பவனி வந்தனர். இந்நிலையில் மைசூர் உடையார் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மகாராஜாவாகவும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்தஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்
(60) பெங்களூரில் செவ்வாய்க்கிழமை காலமானார். பெங்களூரில் உள்ள தமது அரண்மனையில் மனைவி மகாராணி பிரமோத தேவியுடனும், 2 சகோதரிகளுடனும் வசித்தார். அவருக்கு வாரிசுகள் இல்லை.
மைசூர் மகாராஜாவின் திடீர் மறைவால் கர்நாடக அரசு 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தது. புதன்கிழமை அரசு விடுமுறையும் விடப்பட்டது.
செவ்வாய், புதன்கிழமைகளில் மைசூர் நகரம் முழுவதும் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து மகாராஜாவின் உடல் மைசூரில் உள்ள அவரது அம்பா விலாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரச குடும்ப வழக்கபடி 50-க்கும் மேற்பட்ட பூசாரிகள் அவரது உடலுக்கு 3 மணி நேரம் பூஜை நடத்தினர். அதன்பிறகு அரண்மனையின் 2-வது தளத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் இறுதி அஞ்சலிக் காக வைக்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, எச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள்ஸ்ரீகண்டதத்த உடையாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் புதன்கிழமை காலை முதலே இறுதி அஞ்சலி செய்வதற்காக அரண்மனைக்கு திரண்டு வந்தனர்.
மைசூர் மட்டுமில்லாமல் பெங்களூர், மண்டியா, ரங்கபட்டினம், ஹாசன், ராம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அமைதியாக இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 4 மணி அளவில் கண்டதத்த உடையாரின் உடல் மைசூர் வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை வழக்கமாக தகனம் செய்யும் மைசூர்-ஊட்டி சாலையில் உள்ள மதுவனா தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசியல் தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும், பூசாரிகளும் சூழ்ந்து நிற்க 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாராஜாவின் உடலுக்கு அவரது அக்கா காயத்ரி தேவியின் மகன் சதுரங்க கந்தராஜ உடையார் தீமூட்டினார். இதன் மூலம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த மைசூர் உடையார் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT