Published : 07 Oct 2014 10:13 AM
Last Updated : 07 Oct 2014 10:13 AM
ஆந்திராவில் மனைவி மீதான கோபத்தால் தனது இரண்டு மகன்களைக் கொன்ற பேராசிரியர், தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் குருபிரசாத் (43) ஹைதராபாதில் உள்ள இக்பாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகாசினி (38) சாப்ட்வேர் பொறியாளர். இவர்களுக்கு விட்டல் விரிஞ்சி (9), நந்த விஹாரி (5) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்த தம்பதி கடந்த ஓராண்டாக கருத்து வேறபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் ஹைதராபாத் நீதிமன்றத்தில் சுகாசினி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 3 மணி நேரம் மட்டும் பிள்ளைகளைப் பார்க்க தந்தைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது.
வழக்கம்போல் கடந்த சனிக்கிழமையன்று தனது இரு மகன்களையும் மனைவியிடமிருந்து அழைத்து வந்த குருபிரசாத் மீண்டும் ஒப்படைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டபோது, குருபிரசாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக செகந்திராபாத் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பிள்ளைகளின் நிலை என்னவானது என புரியாமல் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இரு குழுக்கள் அமைத்து பல இடங்களில் தேடி வந்தனர்.
குருபிரசாத்துக்கு சொந்தமான வீட்டு மனை உள்ள இடத்தில் இரண்டு மகன்களையும் எரித்து கொன்று புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப் பட்டு சடலங்கள் சுகாசினியிடம் ஒப்படைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT