Published : 28 Oct 2014 06:08 PM
Last Updated : 28 Oct 2014 06:08 PM
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்களின் முழு பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் தீவிர முயற்சியின்பேரில் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளோரின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இதில் டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பிரதீப் பர்மன், ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜி டிரேடிங் கம்பெனி தலைமை மேம்பாட்டாளர் பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ராதா சதீஷ் திம்ப்லோ மற்றும் ஐந்து இயக்குநர்களின் பெயர்களை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ரஞ்சனா பி.தேசாய், மதன் லோக்கூர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் முழு பட்டியலையும் தாக்கல் செய்யாத மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அனைத்து பெயர்களையும் வெளி யிட வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
‘குடை பிடிக்க வேண்டாம்’
‘கருப்பு பணம் பதுக்கியுள்ள வர்களை பாதுகாக்க மத்திய அரசு குடை பிடிக்க வேண்டாம்’ என்று தெரிவித்த நீதிபதிகள், ‘நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். முழு பட்டியலையும் தாக்கல் செய்யுங்கள். சிறப்பு புலனாய்வுக் குழு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.
மேலும், ‘இப்பிரச்சினையை மத்திய அரசின் பொறுப்பில் விடமுடியாது. அப்படி செய்தால், கருப்பு பணத்தை மீட்கும் கனவு நம் காலத்தில் நடக்காது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் ஒரு வார்த்தையைக்கூட மாற்றமாட்டோம். கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் முழு பட்டியலையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமைக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT