Last Updated : 23 Sep, 2013 12:22 PM

 

Published : 23 Sep 2013 12:22 PM
Last Updated : 23 Sep 2013 12:22 PM

வருமா வாஜ்பாய் காலத்து கூட்டணி?

புது டெல்லியில் சனிக்கிழமை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாஜ்பாய் காலத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் அமைப்பதற்கான முயற்சி யாகவும் கருதப்படுகிறது. தனித் தெலங்கானாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க புது தில்லி வந்திருந்த சந்திரபாபு நாயுடு பாஜக தலைவரை சந்தித்துள்ளார்.

ஆந்திரத்தை பிரிக்கக்கூடாது என்கிறது தெலுங்கு தேசம் கட்சி. காரணம், ஆந்திரம் பிரிந்து விட்டால் இருக்கும் சீமாந்திரா பகுதியில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிப்பது சிரமம். அதேநேரத்தில், தெலங்கானாவில் தெலுங்கு ராஷ்டிரிய சமிதியுடனும்: சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடனும் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸுக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தனித் தெலங்கா னாவிற்கு பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக நாயுடு கருது கிறார். எனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் விட்டுச் செல்லும் பணியை பாஜக முழுமை செய்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், ஆந்திரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால், தெலுங்கு தேசம் கடைசிவரை எதிர்கட்சியாகவே இருக்கும்.

இதை தவிர்க்க நாயுடுவிற்கு மீண்டும் பாஜகவுடன் கூட்டு சேர்வதை விட வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெலங்கானா விவகாரத்தை பாஜக கைவிடாவிட்டாலும், நாயுடு விற்காக அதை மீண்டும் தள்ளி போட வாய்ப்புள்ளது.

இது குறித்து நாயுடுவிடம் கேட்கப்பட்டபோது,'தெலங்கானா பிரச்சினைக்காகவே பாஜக தலைவரை சந்திக்க வந்தேன். அரசியல் குறித்துப் பேசவில்லை." என்றார்.

கடந்த காலம்

1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு அங்கம் வகித்தார். அதன் அமைப்பாளராகவும் அவர் இருந்தார். அந்தத் தேர்தலில் ஆந்திரத்தின் 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசத்திற்கு 29, பிஜேபி 8 இடங்களில் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x