Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை மறுபரீசீலனை செய்யுமாறு குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான என். ராஜாராமன் மற்றும் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரின் தனிச்செயலாளர் சுனில்குமார் வர்மாவிடம் புதன்கிழமை வழங்கினர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அறிவு என்கிற ஏ.ஜ வி.தியாகராஜன் கூறி இருந்தார். சமீபத்தில் தூக்கு தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்ட டாக்குமெண்டரி பதிவில் இந்தத் தகவல் வெளியானது.
இதைத் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ள ராஜாராமன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 72-ன்படி பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரீசிலனை செய்யும்படி குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பரிந்துறையின்படி, பேரறிவாளனுடைய கருணை மனு குடியரசுத்தலைவரால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டது என ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை இல்லாமலேயே கருணை மனுவை குடியரசு தலைவர் தானாக முன்வந்து மீண்டும் பரிசீலிக்கலாம்.
தனக்கு உரிய அதிகாரத்தின்படி தண்டனையைக் குறைக்கவும், ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதுபோன்ற கருணை மனுவை குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து, நீதிபதிகள் தரும் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டும் முடிவு செய்ய முடியும் என்றார்.
இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் பேசிய ராஜாராமன் கூறுகையில், ‘சிபிஐயின் கண்காணிப்பாளராக பணியாற்றிய தியாகராஜன் கூறிய கருத்து தாமதமானது என்றாலும் அது மிகவும் அதிர்ச்சிகரமானது. கேரள பகுதி சிபிஐ அதிகாரியான இவருக்கு 1991-ல் பேரறிவாளன் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் பணி தரப்பட்டது. இவர் அந்தப் பணியை முழுமையாகச் செய்யவில்லை என அந்த டாக்குமெண்டரி பதிவில் ஒத்துக் கொண்டிருக்கிறார். இதை உணர்ந்தபோதும், அப்போது தியாகராஜனால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்றார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களான இவர்கள், தமிழகம் உட்பட பல மாநில பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பொதுநல வழக்குகள் தொடுத்து வருகின்றனர். பேரறிவாளனுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் மற்றும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு எதிராக கருத்து கூறியிருப்பது குறித்தும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
தூக்கு தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின், அவர் மீதான விசாரணையில் தவறு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருப்பது இதுவே முதன்முறை. இதையே ஆதாரமாகக் கொண்டு குடியரசு தலைவருக்கு மறுபரிசீலனை மனு அளிக்கப்பட் டிருப்பதும் இதுதான் முதன் முறை எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT