Published : 19 Dec 2013 02:21 PM
Last Updated : 19 Dec 2013 02:21 PM

மறுமணம் செய்தாலும் விதவைப் பெண்களுக்கான நிவாரணம் உண்டு: நீதிமன்றம் உத்தரவு

முதல் கணவனின் எதிர்பாராத மரணத்திற்கு பின் மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்களுக்கான நிவாரணத்தை நிறுத்தக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி தர்மதிகாரி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

"பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. மறுமணம் செய்து கொண்டார் என்பதனால், முதல் கணவருடன் அந்தப் பெண் வாழ்ந்ததையோ, குழந்தைப் பெற்றுக் கொண்டதையோ, அந்தக் குழந்தையை பேண முதல் கணவரின் துணையை அவர் இழந்து விட்டார் என்பதையோ மறுக்க முடியாது. எனவே மறுமணம் ஆனாலும் அவருக்கான நிவாரணம் கொடுக்கப்படவேண்டும்" என அமர்வு உத்தரவிட்டது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த விபத்து இழப்பீடுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கான நிவாரணத்தை தர மறுத்தது. ஆனால் அவரது பெண்ணிற்கு வழங்கியது.

மும்பை நகரில் வசித்து வந்த சந்தீப் புரந்தரே, ஜுலை 5, 2006 அன்று அந்தேரி பகுதியில் நடந்த விபத்தில் காலமானார். இதற்கான நிவாரணமாக சந்திப்பின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாயை தீர்ப்பாயம் வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிவாரணத் தொகையை வட்டியுடன் சேர்த்து 66.98 லட்சமாக உயர்த்தியது. முதலில், இறந்தவரின் வருமானம் ஒழுங்காகக் கணக்கிடப்படவில்லை, அவர் உயிரோடு இருந்தால் சம்பாதித்திருக்கக்கூடிய பணத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள் வேண்டும் என்றும் தெரிவித்தது.

மேலும், 67 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையில் 20 சதவீதம் இறந்தவரின் மனைவிக்கும், 60 சதவீதம் அவரது 11 வயது மகளுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் அவரது தாயாருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு வழக்காடுதலுக்கான செலவுகளுக்கு 30,000 ரூபாய் தரச் சொல்லியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த குழந்தையின் படிப்புச் செலவுக்கும், அன்றாட செலவுகளுக்கும், எதிர்காலத்தில் திருமண செலவுகளுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலேயே நிவாரணத்தின் பெரும் பங்கு குழந்தைக்கு என நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x