Published : 07 Dec 2014 07:42 PM
Last Updated : 07 Dec 2014 07:42 PM

திட்டக் குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்க மாநில முதல்வர்கள் ஆதரவு

திட்டக் குழுவை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்குவதற்கு பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர். எனினும், இப்போது உள்ள அமைப்பை கலைப்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

கடந்த சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவை கலைத்துவிட்டு, இப்போதைய பொருளாதார சூழலுக்கேற்ப புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சில மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பல் வேறு துறை சார்ந்த நிபுணர் களைக் கொண்டதாக பிரதமர் தலைமையில் புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை கூறப்பட்டது.

மாநில முதல்வர்களை சுழற்சி முறையில் புதிய அமைப்பில் இடம்பெறச் செய்வது குறித்தும், ஒதுக்கும் நிதியை தேவைக்கேற்ப சுதந்திரமாக செலவழிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.

பெரும்பாலான முதல்வர்கள் திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கு வதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இதை ஏற்க மறுத்தனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயற்சியில் கடந்த 1950-ல் உருவாக்கப்பட்ட திட்டக் குழுவை மறுசீரமைக்கலாம் என யோசனை கூறினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் திட்டக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திட்டக் குழுவால் செயல்படுத் தப்படும் ஐந்தாண்டுத் திட்டம், வருடாந்திர திட்டங்கள், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்குவதற்கான இப் போதைய நடைமுறைகள் ஆகியவை குறித்து விரிவாக இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப் பட்டது. குறிப்பாக, இப்போது நடைமுறையில் உள்ள 12-வது ஐந்தாண்டு திட்டத்தை (2012-17) கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, “புதிய அமைப்பை உருவாக்குவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆலோசனை முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். அதேநேரம் திட்டக் குழுவில் மாற்றம் செய்வ தற்கு அனைத்து முதல்வர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் திட்டக் குழுவை கலைப் பதற்கு ஒருசில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்றார்.

எனினும், அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி புதிய அமைப் புக்கு இறுதி வடிவம் கொடுக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்கம், மிசோரம் முதல்வர்கள், சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெறும் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x