Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
மகாராஷ்டிர மாநிலம், தானே மக்களவை தொகுதியில் சிவசேனை கட்சி வேட்பாளருக்கு எதிராக ராஜ்தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை (எம்.என்.எஸ்) வேட்பாளரை அறிவித்துள்ளது.
இத்தொகுதியில் சிவ சேனையின் ராஜன் விகா ரேவுக்கு எதிராக எம்.என்.எஸ். கட்சி சார்பில் அபிஜித் பன்சே போட்டியிடுகிறார். அபிஜித் பன்சே இதற்கு முன் சிவசேனையில் இருந்தவர்.
இதுபோல் பாஜக போட்டி யிடும் பிவாண்டி மக்களவை தொகுதியிலும் எம்.என்.எஸ். வேட்பாளரை அறிவித்துள்ளது. இத்தொகுதியில் பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், எம்.என்.எஸ். சார்பில் சுரேஷ் மகாத்ரே என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சிவசேனையின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி சேனையின் முன்னாள் தலைவர்.
மகாராஷ்டிரத்தில் பாஜக வுடன் சிவசேனை கூட்டணி வைத்துள்ள நிலையில், சிவ சேனையின் எதிர் அணியான எம்.என்.எஸ்., வரும் மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவளிப்பதாக கூறியது. இதனை சிவசேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார்.
“இதற்கு முன் பால் தாக்கரேவின் படத்தை பயன் படுத்த எம்.என்.எஸ். முயற்சி செய்தது. ஆனால் கடும் எச்சரிக் கைக்குப் பின் அதை நிறுத்திக்கொண்டனர். இப்போது வாக்குகளை பெறுவதற்காக மோடியின் முகமூடியை பயன் படுத்துகின்றனர்” என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
உத்தவ் தாக்கரேவுடன் பூணம் மகாஜன் சந்திப்பு
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகளும், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான பூணம் மகாஜன் நேற்று உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து உத்தவ் கூறுகையில், “பூணம் எங்கள் குடும்பத்தில் ஒருவரை போன்றவர். அவர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி. அவருக்கு வாழ்த்து களை தெரிவித்தேன். நான் வசிக்கும் தொகுதியில் அவர் போட்டியிடுவதால் எனது வாக்கு அவருக்குத்தான்” என்றார். மும்பை வடமேற்கு தொகுதியில், தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான பிரியா தத்துக்கு எதிராக பூணம் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT