Published : 23 Feb 2014 03:08 PM
Last Updated : 23 Feb 2014 03:08 PM

புதிய கட்சி தொடங்குகிறார் கிரண்குமார் ரெட்டி: ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை

புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1983-ல் என்.டி. ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கும் வரை ஆந்திர மாநிலம் காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த நீலம் சஞ்சீவி ரெட்டி, பி.வி.நரசிம்ம ராவ் போன்றவர்கள் இந்திய அரசியலில் உயர் பதவிகளை வகித்தனர். பெருந்தலைவர்கள் உருவான ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி தற்போது காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

சுமார் 58 ஆண்டுகளாக தெலங்கானா போராட்டம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது. ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி காலமானதற்கு பின்னர் போராட்டம் தீவிரமானது. 2009-ல் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது தெலங்கானா மாநிலம் வழங்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்தது. பின்னர் தனது வாக்குறுதியில் இருந்து பின் வாங்கியதால் தெலங்கானாவில் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டது. ஒரே மாநில மக்கள் எதிரெதிர் அணிகளில் நின்றனர். மாநில பிரிவினையை எதிர்த்து சீமாந்திராவில் போராட்டம் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் ஒரு ஓட்டு- இரண்டு மாநிலம் என்கிற பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை ஒடுக்க காங்கிரஸ் மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டது.

காங்கிரஸ் வியூகம்

விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளால் காங்கிரஸுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என மேலிடம் முடிவு செய்தது. இதனால் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கி பாதி மாநிலத்திலாவது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் முடிவு செய்ததாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சீமாந்திரா பகுதி காங்கிரஸை சேர்ந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பலர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானம் செய்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி கட்சியில் இருந்து விலகியது இவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

கிரண்குமார் ரெட்டி ஆலோசனை

ஹைதராபாதில் மாதாபூர் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கிரண்குமார் ரெட்டி தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

“சீமந்திராவில் காங்கிரஸ் ஏறக்குறைய காலியாகி விட்டது. மாநில ஒற்றுமைக்காக முதல்வர் பதவியை தியாகம் செய்த நீங்கள் கட்சி தொடங்கினால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை கைப்பற்றிவிடலாம். தெலங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு கடிதம் வழங்கியதால் தெலுங்கு தேசம் கட்சிக்கும் சீமாந்திராவில் அதிக வாக்குகள் கிடைக்காது. தெலங்கானா மசோதாவுக்கு ஆதரவளித்த பா.ஜ.க.வுக்கும் வாக்குகள் கிடைக்காது. மீதம் இருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்தான். அந்த கட்சியும் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸில் இணையும் என பேசப்படுவதால் மக்கள் உங்களைத்தான் நம்புவார்கள். எனவே புதிய கட்சி தொடங்கலாம்” என கிரண்குமார் ரெட்டிக்கு அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே இரண்டொரு நாள்களில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை கிரண்குமார் ரெட்டி வெளியிடுவார் என்று தெரிகிறது.

அவர் புதிய கட்சி தொடங்கினால் சுமார் 50 எம்.எல்.ஏ க்கள், 11 அமைச்சர்கள் அவரது கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x