Published : 03 Aug 2016 03:30 PM
Last Updated : 03 Aug 2016 03:30 PM
ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அமர் சிங், ஜெயப்பிரதா மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தில் உள்ள சர்ச்சைப் பகுதிகளை தெளிவுபடுத்த மறுத்துவிட்டது.
இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மறுத்துள்ளது. அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா போன்றவர்களுக்கு ஆதாயம் தேடித் தரும் வகையில் அமையும் என பரவலாகக் கூறப்படுகிறது.
வழக்கு பின்னணி:
உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளராக இருந்தவர் அமர்சிங். இவரது ஆதரவாளர் ஜெய்ப்பிரதா. இருவரும் மக்களவையில் எம்.பி.க்களாக இருந்தனர். முலாயம் சிங் யாதவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு அமர்சிங் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். இதே போல் ஜெயப்பிரதாவும் கட்சியை விட்டு விலகி அமர்சிங் கட்சியில் இணைந்தார்.
ஆனால், 4 ஆண் டுகளுக்கு பின்பு முலாயம் சிங் யாதவுடனான கருத்து வேறுபாடு நீங்கியதால் அமர்சிங் மீண்டும் சமாஜ்வாதியில் இணைந்தார். ஜெயப்பிரதாவும் சமாஜ்வாதியில் மீண்டும் இணைந்தார்.
இடைப்பட்ட காலத்தில், அமர்சிங், ஜெயப்பிரதா ஆகிய இருவரது பதவியும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
6 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பி.சி.பன்ட் அகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இருவரது பதவி காலமும் முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேவேளையில் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் தொடர்பாக மனுதாரர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மறுத்துவிட்டனர்.
மனுதாரர்கள் எழுப்பிய முக்கிய கேள்வி?
"ஒரு உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும்கூட கட்சி கொறடா உத்தரவை மீறியதாக அவர் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாமா?" என அமர் சிங்கும், ஜெயப்பிரதாவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறினாலோ அல்லது வேறு கட்சிக்கு தாவினாலோ தான் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை பிரயோகப் படுத்த முடியும்" என வாதாடினர்.
உச்ச நீதிமன்றம் சொல்லியது என்ன?
"அமர் சிங், ஜெயப்பிரதா ஆகிய இருவரது பதவிக் காலமும் முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை. எனவே மனுதாரர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதே உகந்தது என நாங்கள் முடிவுக்கு வந்துள்ளோம்" என நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT