Published : 05 Dec 2013 10:15 AM
Last Updated : 05 Dec 2013 10:15 AM

ஏடிஎம் குற்றவாளி ஆந்திரத்தைச் சேர்ந்தவன்: பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

பெங்களூர் ஏ.டி.எம் மையத்தில் பெண்ணை கொடூரமாக தாக்கிய கொள்ளையன் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரைச் சேர்ந்தவன் என காவல் துறையினர் கண்டறிந்து உள்ளனர்.

கடந்த நவம்பர் 19-ம் தேதி காலை பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய்(38) என்கிற வங்கி ஊழியர் கொடூரமாக தாக்கப்பட்டார். கொள்ளையன் அவரை கத்தியாலும் துப்பாக்கியாலும் தாக்கியது சிசிடிவி வீடியோ காட்சிகள் மூலம் அம்பலமானது.

தீவிர தேடுதல் வேட்டை

ஏடிஎம் கொள்ளையனைப் பிடிக்க 8 தனிப்பிரிவுகளை பெங்க ளூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா அவ்ரத்கர் நியமித்தார். ஆந்திர போலீசாரின் உதவியுடன் ஏடிஎம் கொள்ளையன் குறித்து தீவிரமாக விசாரித்த‌போது பல பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

ஆந்திரத்தில் ஒரு கொலை

நவம்பர் 10-ஆம் தேதி ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் தர்ணாவரம் என்ற இடத்தில் பரிமளம்மா (52) என்ற பெண்ணை ஏடிஎம்-மில் கொலை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஏடிஎம் கொள்ளையன் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான போனதும் அவனை கைது செய்ய போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில் பெங்களூர் ஏடிஎம் மையத்திலும், அனந்தப்பூர் ஏடிம் மையத்திலும் பதிவாகி இருந்த கொள்ளையனின் கைரேகையை வைத்து அலசினர்.

அப்போது அவன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி தாலுகாவில் உள்ள நல்லசெருவு மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவன் என தெரிய வந்தது. 36 வயதான அவனுடைய பெயர் நாராயண ரெட்டி என்பதையும் பெங்களூர் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து, பெங்களூர் போலீசார் கொள்ளையன் நாராயண ரெட்டியை பிடிக்க நல்லசெருவு கொண்டல் கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை விரைந்தனர். அப்போது அவன் அங்கிருந்து தப்பிவிட்டான். அவனுடைய‌ வீட்டில் இருந்த தந்தை சிவா ரெட்டியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தின‌ர்.

ஒரு லட்சம் சன்மானம்

அப்போது, “கொள்ளையன் நாராயண ரெட்டி வீட்டிற்கு வந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவன் மனநிலை பாதித்தவன். அவனைப் பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது'' என சிவா ரெட்டி கூறியுள்ளார். ஆனால் தனிப்பிரிவு போலீசார் அவனது வீட்டை தீவிர மாக சோதனை செய்தபோது, அங்கி ருந்த பொருட்களில் படிந்திருந்த கைரேகையும், கொள்ளையனின் கைரேகையும் பொருந்தியது. ஆனால் அவனது தந்தை கொள்ளையனை காப்பாற்றும் விதமாக, முன்னுக்குபின் முரணான தகவல்களை கொடுத்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனால் அவனது தந்தையை கைது செய்து தனி இடத்தில் வைத்து தீவிர விசாரனை நடத்தி வருகிறனர்.

ஏடிஎம் கொள்ளையன் நாராயண ரெட்டி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடக போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x