Published : 12 Feb 2014 12:44 PM
Last Updated : 12 Feb 2014 12:44 PM
நான்கு மாதங்களுக்கான ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் 73 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீசனுக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் 17 பிரிமியம் ரயில்கள், 39 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10 பயணிகள் ரயில்கள் ஆகியவை இதில் அடங்கும். பட்ஜெட்டில் பயணிகள், சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தமிழகத்துக்கு 5 விரைவு ரயில்கள், 2 பிரிமியம் ரயில்கள், 3 பயணிகள் ரயில்கள் என மொத்தம் 10 ரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
5 எக்ஸ்பிரஸ் ரயில்கள்
தமிழகம் வழியாக இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம் வருமாறு:
சென்னை- பெங்களூர் தினசரி எக்ஸ்பிரஸ்
மன்னார்குடி- ஜோத்பூர் (ராஜஸ்தான்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
சென்னை- மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக கச்சிகுடாவுக்கு (ஆந்திரம்) இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ். ஹவுராவில் இருந்து காட்பாடி வழியாக யஷ்வந்த்பூர் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ்.
2 பிரிமியம் ரயில்கள்
பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ள 17 பிரிமியம் ரயில்களில் இரண்டு ரயில்கள் தமிழகம் வழியாகச் செல்கின்றன.
சென்னை- காமக்யா (அசாம்) வாராந்திர ஏசி ரயில்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோடு, திருப்பத்தூர் வழியாக பெங்களூர் வரை வாரம் இருமுறை இயக்கப்படும் ரயில்.
3 பயணிகள் ரயில்கள்
1. மன்னார்குடி- மயிலாடுதுறை - தினசரி
2. திருச்செந்தூர்- திருநெல் வேலி - தினசரி
3. புனலூர் (கேரளம்)- கன்னியாகுமரி - தினசரி
ரயில்வே கட்டண ஆணையம்
“விமானப் போக்குவரத்துத் துறையைப் பின்பற்றி வெளிப்படைதன்மையுடன் ரயில்வே கட்டண விகிதங்களை பரிந்துரைக்கும் சுதந்திரமான ரயில்வே கட்டண ஆணையம் அமைக்கப்படும்” என்று அமைச்சர் கார்கே அறிவித்தார்.
இப்போதைய நிலையில் ரயில்வே வாரியம் மட்டுமே கட்டண விகிதங்களை நிர்ணயித்து வருகிறது. முதல்முறையாக 5 பேர் கொண்ட ரயில்வே கட்டண ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆணையத்தில் ஒரு தலைவரும் 4 உறுப்பினர்களும் இடம்பெறுவர். இதன்படி முன்னாள் ரயில்வே அதிகாரிகள், முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பொதுத்துறை வங்கிகளின் முன்னாள் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
“டெல்லி - மும்பை இடையே அறிமுகம் செய்யப்பட்ட பிரிமியம் ஏசி சிறப்பு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்று கார்கே தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சர்வதேச தரத்தில் ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அன்னிய முதலீட்டை ஈர்ப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி- ஆக்ரா, டெல்லி-சண்டிகர் உள்ளிட்ட குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160-200 கி.மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 6-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி செலவு ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT