Published : 16 Oct 2015 02:55 PM
Last Updated : 16 Oct 2015 02:55 PM

மத்திய அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு: முக்கியத் தரப்பினரின் கருத்துகள்

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு சட்டத்துறையைச் சேர்ந்த முக்கியமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரங்களுக்காக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், நீதிபதிகள் நியமன விவகாங்களை கடந்த 22 ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 'கொலீஜியம்' அமைப்பு முறையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வழக்கை பேரமர்வுக்கு மாற்றக் கோரிய மத்திய அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பல தரப்புகளிலிருந்தும் கருத்துகள் எழுந்துள்ளன.

சட்ட அமைச்சர் சதானந்த கவுடா: "தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்த தீர்ப்பு ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆணையம் நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை பெரிதும் ஆதரித்த ஒன்று. மக்களின் 100% ஆதரவு இந்த ஆணையத்துக்கு இருந்தது."

அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி: "நீதித்துறை நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கோரும் மக்களின் விருப்பம், சட்டமியற்றுபவர்களில் பாதி பேரின் விருப்பம் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஏகமனதான விருப்புறுதியை புறக்கணிக்கும் தவறான தீர்ப்பாகும் இது. கொலீஜியம் முறையை தக்க வைப்பது முறையல்ல. இந்தத் தீர்ப்பு மறுசீராய்வுக்கு உகந்ததல்ல. நாடாளுமன்றம் முடிவெடுக்கலாம். ஆனால் நான் அவர்களுக்காக பேச முடியாது."

மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி: "ஜனநாயகத்துக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்; சட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்."

முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்: "தவறாக உருவெடுத்த சட்ட மசோதா. அருண் ஜேட்லி பிற துறைகளில் கவனம் செலுத்துவதை விடுத்து தனது அமைச்சகம் பற்றி கவனம் செலுத்த வேண்டும்."

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே: "அதிகாரம் தங்களிடமே உள்ளது என்ற செய்தியை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது."

கேடிஎஸ். துளசி: "நான் மிகுந்த ஏமாற்றமடைகிறேன். நாடாளுமன்றத்தில் யாரோ ஒருவர் கூறியது போல், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மீது மக்களால் தேர்வு செய்யப்படாதவர்கள் செய்யும் கொடுமை."

மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம்: "கொலீஜியம் முறை சிறப்பான முறையில் செயல்பட மேலும் விவாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைத்துள்ளது நல்ல அறிகுறி. கொலீஜியம் முறையில் குறைபாடுகள் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டது நீதிமன்றம் என்பதையே இது காட்டுகிறது.

கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது, இரண்டாவது, அதிகார மட்ட தலையீடுகளை நிறுத்தி விட்டது உச்ச நீதிமன்றம். கேசவனந்தா பாரதிக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தகுந்த தீர்ப்பாகும்."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x