Last Updated : 08 Oct, 2014 10:21 AM

 

Published : 08 Oct 2014 10:21 AM
Last Updated : 08 Oct 2014 10:21 AM

குளிர்கால கூட்டத் தொடரில் பயன்படாத சட்டங்கள் வாபஸ்: அமைச்சரவை செயலர் தகவல்

‘பயன்படாத சட்டங்கள் வரும் குளிர்கால கூட்டத் தொடரில் வாபஸ் பெறப்படும்’ என்று மத்திய அமைச்சரவை செயலர் அஜித் சேத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சரவை செயலர் அஜித் சேத் கூறியதாவது:

காலத்திற்கு ஒவ்வாத, பயன்படாத சட்டங்களை வாபஸ் பெற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு 1,382 சட்டங்களை வாபஸ் பெற பரிந்துரை செய்தது. இதில், 415 சட்டங்கள் இதுவரை வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும், 72 சட்டங்களை வாபஸ் பெறும்படி, சட்டக் குழு பரிந்துரை அளித்துள்ளது.

பயன்படாத சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக செயலில் இறங்கி உள்ளன. சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பான 700 சட்டங்கள் மற்றும் விதிமுறைகளும் வாபஸ் பெறப்பட உள்ளன. தவிர்க்கக் கூடிய குழப்பங்களை சரி செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டதன் பேரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இச்சட்டங்கள் வாபஸ் பெறப்படும். அரசு நடைமுறைகளும் எளிமையாக்கப்பட உள்ளன. இதன் பலன் விரைவில் மக்களுக்கு தெரியவரும்.

மக்களுக்கு சிறப்பான சேவை அளிப்பதுதான் அரசுக்கு தற்போதுள்ள பெரும் சவால். பொருளாதார வளர்ச்சியை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். எந்த தரப்பு மக்களும் விடுபடாத வகையில் இந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம். அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அஜித் சேத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x