Published : 10 May 2017 11:54 AM
Last Updated : 10 May 2017 11:54 AM
ஹைதராபாத் நகரில் நேற்று அதிகாலையில் நடந்த கார் விபத்தில் ஆந்திர அமைச்சர் நாராயாணாவின் மகன் நிஷித் மற்றும் அவரது நண்பர் ராஜா ரவிச்சந்திரா ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா. இவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பராவார். இவர் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ‘நாராயணா’ கல்வி குழுமத்தை நடத்தி வருகிறார். பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பள்ளி களை உள்ளடக்கிய இக்குழுமத் துக்கு இவரது மகன் நிஷித் (22) இயக்குநராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று அதி காலை 2.40 மணியளவில் நிஷித்தும் அவரது நண்பர் ராஜா ரவிச்சந்திரா (23) ஆகிய இருவரும் ஹைதராபாத்தில் மெர்சிடெஸ் பென்ஸ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நிஷித் காரை ஓட்டி உள்ளார். அப்போது வழியில் இருந்த ஒரு மின் கம்பத்தில் கார் வேகமாக மோதியதில் இருவரும் படுகாய மடைந்தனர்.
அப்போது அங்கிருந்த மாநகராட்சி துப்புரவுத் தொழி லாளர்கள் விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இவர் கள் இருவரையும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாராயணா, இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக நாடு திரும்பினார். நெல்லூரில் உள்ள நாராயணா கல்வி நிறுவன வளாகத்தில் நிஷித்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.
முதல்வர் இரங்கல்
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிஷித் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித் துள்ளார். மேலும் ஆந்திர மற்றும் தெலங்கானா மாநில அமைச்சர் கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிஷித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விபத்து நடந்தபோது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளனர். இதுவே விபத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது. சுமார் 1.75 கோடி மதிப்புள்ள இந்தக் காரில் உயிர் காக்கும் 3 பலூன்களும் உள்ளன. இவை அனைத்தும் கார் மோதிய உடன் திறந்தும் பலனில்லை. மேலும் நிஷித் சீட் பெல்ட் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு, சுவாசப்பை, கல்லீரல் ஆகியவை நசுங்கி விட்டதாகவும் இவர்கள் மது அருந்தவில்லை எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிவேகமாக கார் ஓட்டியதாக ஹைதராபாத் மாநகராட்சி போலீஸார் நிஷித்துக்கு அபராதம் விதித்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT