Published : 17 Oct 2013 10:35 AM
Last Updated : 17 Oct 2013 10:35 AM
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் 'புகையிலை உற்பத்திக்கு வரி விலக்கு' என்று அறிவித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் புகையிலை பயன்பாட்டுக்கு 63 சதவிகித ஆண்களும் 35 சதவிகித பெண்களும் அடிமையாக இருக்கிறார்கள். தவிர, 'குளோபல் ஆடல்ட் டொபேக்கோ சர்வே' எனும் சர்வதேச அமைப்பு பீகாரில் உள்ள மக்களில் பாதிப்பேர் புகையிலைக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.இந்தக் கணக்கெடுப்புகள் கொடுத்த அழுத்தத்தால் 2012 மே மாதத்தில் 'உலக புகையிலை எதிர்ப்பு' நாளில் 'இனி அடுத்த ஓர் ஆண்டுக்கு எந்த விதமான புகையிலைப் பொருட்களையும் தயாரிப்பதில்லை' என்று பீகார் மாநிலம் முடிவு செய்தது. மத்திய அரசின் இந்தக் கட்டுப்பாட்டை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலம் என்ற பெருமையையும் அது பெற்றது.
இந்நிலையில், புதன்கிழமை அன்று 'புகையிலை உற்பத்திக்கு வரிவிலக்கு' என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். புகையிலை உற்பத்தியாளர்கள் கொடுத்த அழுத்தம் என்றும், தேர்தல் யுக்தி என்றும் பலவாறாக விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரிடம் கேட்டபோது, 'புகைப்பது புற்று நோயை உண்டாக்கும்' என்று சிகரெட் பாக்கெட்டுகளின் மீது விளம்பரப்படுத்தினாலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆக, அரசினுடைய எண்ணம் புகையிலைப் பொருட்கள் உற்பத்தி செய்வதைத் தடுப்பதல்ல. மாறாக ஊக்கப்படுத்துவது. அதற்கு மிகச் சரியான உதாரணம் இது" என்றார்.
புகையிலையைப் பயிர் செய்வதால் சுற்றுச்சூழலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று கேட்ட போது, "இது பூமிக்கு உரம் சேர்க்கும் பயிர் அல்ல. உவர் நிலங்களில் அதிகமாக வளரும். புகையிலைப் பயிரை தொடர்ந்து வளர்த்து வந்தால், அந்த நிலம் உவர்ப்புத் தன்மை கொண்டதாக மாறிவிடும். இதனால் அந்த நிலத்தில் வேறு பயிர்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்படும்" என்றார்.
தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் இது தொடர்பாக 'தி இந்து' நிருபரிடம் கூறும்போது, "எல்லா மாநிலங்களிலும் புகையிலைப் பொருட்களுக்கு 50 சதவிகிதத்துக்கு அதிகமாக வரி போடப்படுகிறது. இந்த நிலையில் புகையிலை உற்பத்திக்கும் புகையிலைப் பொருட்களுக்கும் ஆதரவாக பீகார் முதல்வர் அறிவித்திருப்பது 2003ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட புகையிலைப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தை மீறுவதாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT