Published : 11 Feb 2014 09:10 AM
Last Updated : 11 Feb 2014 09:10 AM

மாநிலங்களவையில் அலுவலக தாள்களை கிழித்தெறிந்து உறுப்பினர்கள் ரகளை: தமிழக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கூச்சல், குழப்பம்

மாநிலங்களவையில் அவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக, திமுக, தெலுங்கு தேசம் கட்சிகளைச் சேர்ந்த 10 உறுப் பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.மைத்ரேயன் (அதிமுக), டி.எம்.செல்வகணபதி (திமுக) உள்ளிட்ட உறுப்பினர்கள் அலுவலக தாள்களை கிழித்தெறிந்து கோஷ மிட்டனர்.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் வி.மைத்ரேயன், என்.பாலகங்கா, ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட், கே.ஆர்.அர்ஜுனன், டி.ரத்தின வேல், ஆர்.லட்சுமணன், திமுக உறுப்பினர்கள் டி.எம்.செல்வ கணபதி, வசந்தி ஸ்டான்லி, ஏ.ஏ.ஜின்னா, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோர் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அதன் காரணமாக அவையை அடிக்கடி ஒத்திவைக்க நேர்ந்தது. இந்த 10 உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.மைத்ரேயன், டி.எம்.செல்வ கணபதி உள்ளிட்ட உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மேஜையில் இருந்த மாநிலங்களவை நிகழ்ச்சி நிரல் தாள்களை மைத்ரேயனும், செல்வகணபதியும் கிழித்தெறிந்தனர்.

அவையின் மையப் பகுதியிலிருந்த எம்.பி.க்கள் சிலர், அங்கிருந்த அலுவலக தாள்களை கிழித்து அவைத் தலைவர் இருக்கையை நோக்கி எறிந்தனர். அவைத் தலைவர் முன்பிருந்த மைக்ரோபோனை பறித்து எறிய மைத்ரேயன் முயற்சித்தார். அப்போது, அவைக் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

அலுவலக தாள்களை கிழித் தெறிய வேண்டாம் என்று மைத்ரேயனிடம் மத்திய அமைச்சர் கள் ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சுக்லா ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன. மீண்டும் மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை கூடிய போதும் கூச்சல், குழப்பம் குறைய வில்லை. இதையடுத்து அவையின் நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் கூச்சல், குழப்பம்

மக்களவையில் தெலங்கானா தனி மாநில ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷ மிட்டனர். மதக்கலவரத் தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி உறுப் பினர்களும் கோஷமிட்டனர்.

1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கி யர்களுக்கு எதிரான கலவரத் துக்கு காரணமானவர்களின் பெயர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளியிட வேண்டும் என்று சிரோமணி அகாலிதள உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து முதலில் அரை மணி நேரமும், பின்னர் நண்பகல் 12 மணி வரையும் அவை நடவடிக்கைகளை தலைவர் மீரா குமார் ஒத்திவைத்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் உறுப்பினர் வி.அருணா குமார், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கே.நாராயண ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜா மோகன் ரெட்டி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தனர்.

அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக அவைத் தலைவர் முயற்சித்தபோது, அவையில் கூச்சல், குழப்பம் ஏற் பட்டது. இதையடுத்து அவையின் நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x