Last Updated : 08 Aug, 2016 03:43 PM

 

Published : 08 Aug 2016 03:43 PM
Last Updated : 08 Aug 2016 03:43 PM

தலித் எழுச்சியில் பாஜக புகழ் மங்கும் அச்சத்தால் மோடிக்கு கவலை: மாயாவதி தாக்கு

பசு பாதுகாவலர்கள் குறித்து பொது நிகழ்ச்சியில் கூறிய குற்றச்சாட்டை ஏன் நாடாளுமன்றத்தில் மோடி பேச மறுக்கிறார் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய மாயாவதி, ''பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீதான கவனத்தை திசை திருப்பும் முயற்சியே மோடியின் பேச்சு. ஆனால் அரசியல் லாபத்துக்காகப் பேசிய இந்த தாமதமான கூற்று, ஒரு தோல்வியடைந்த முயற்சி.

பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களவையில் பசுவின் பெயரால் ஏவப்படும் வன்முறைகளின் மீது மோடியின் கவனம் இல்லை. அதனால் தலித் மக்களிடம் அவரின் கட்சிக்கு ஏற்படும் இழுக்கைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். அதுவும் குறிப்பாக உத்தரப் பிரதேச தேர்தல் காரணமாகவே அவர் பேசியிருக்கிறார்.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் ஏற்படுத்தப்படும் 80 சதவீத சட்டவிரோத நடவடிக்கைகள் எதனால் பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களின் மட்டுமே நடைபெறுகின்றன, எதற்காக அந்தந்த மாநில அரசுகள் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றன என்று மோடி விளக்கம் கூற வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையில் இந்தப் பிரச்சனைகள் நடைபெற்று வருவதால் இதை தேசியப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும். போலி பசு பாதுகாவலர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்படும் என்று மோடி அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு. அவரோ, உள்துறை அமைச்சகமோ, வன்முறையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் என்னதான் மோடி முழங்கினாலும், பொறுப்புமிக்க விஷயங்களைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே கேள்விகள் கேட்கப்பட முடியாத பொது விழாக்களில் மட்டும் பேசுகிறார். அதனால் தீவிரமான இந்தப் பிரச்சனை குறித்து அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்'' என்று கூறினார்.

பசுக்களை காப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலிகளைத் தண்டிக்க வேண்டும்

தெலங்கானாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் ‘பகீரதன்’ திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய மோடி, ''உண்மையான பசு பாதுகாவலர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். ஆனால் சிலர் பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்மூலம் சமூகத்தில் பிரிவினை, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய போலி பாதுகாவலர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது நகரங்கள், கிராமங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபட முயன்றால் தடுத்து நிறுத்த வேண்டும். போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தண்டிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x