Published : 13 Mar 2014 02:09 PM
Last Updated : 13 Mar 2014 02:09 PM

ரயிலில் சென்று பிரச்சாரம் செய்த கேஜ்ரிவால்: கறுப்புக் கொடி காட்டி இளைஞர்கள் எதிர்ப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். உள்ளூர் ரயிலில் அவர் பயணம் செய்ததால் நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.

மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியிலிருந்து சர்ச்கேட் வரை உள்ளூர் ரயிலில் பயணம் செய்து அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மெதுவாகச் சென்ற ரயிலில் அதிக அளவு தொண்டர்கள் ஏறியதால், பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சர்ச்கேட் நிலையத்தில் கேஜ்ரிவால் இறங்கியதும், அவரை வேடிக்கை பார்க்க மக்களும் தொண்டர்களும் குவிந்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கறுப்புக் கொடி

அங்கு சில இளைஞர்கள் கேஜ்ரிவால் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். “நாங்கள் எந்த அமைப்பையோ கட்சியையோ சேர்ந்தவர்கள் அல்ல. தனது பேட்டியின் குறிப்பிட்ட சில பகுதிகளை அதிகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்படி செய்தியாளரிடம் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுக்கும் காட்சியை வீடியோவில் பார்த்தோம். அதனால் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கொடி காட்டினோம்” என அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக ரயிலில் அவர் பயணம் செய்த போது, செய்தியாளர்கள் கேஜ்ரிவாலை நெருங்கி பேட்டி எடுக்க முடியாத வகையில் கட்சி நிர்வாகிகள் அவரைச் சூழ்ந்து வளையம் போல் நின்றிருந்தனர். பிற்பகலில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பையும் கேஜ்ரிவால் தவிர்த்து விட்டார். சர்ச்கேட் ரயில் நிலையத்தில் ஆம் ஆத்மி தொண்டர்கள் முண்டியடித்து வெளியேறியதால், அங்கு வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் சேதமடைந்தன.

சட்டப்பூர்வ நடவடிக்கை

இது தொடர்பாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறியதாவது: பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கப்பட்டால், அந்த சேதமதிப்பை அச்சம்பவத்துக்குப் பொறுப்பானவரிடமிருந்து வசூலிக்க மகாராஷ்டிர சட்டம் வகை செய்கிறது. சர்ச்கேட் ரயில் நிலையத்தில் பரிசோதனைக் கருவிகள் உடைந்தது திட்டமிட்ட செயலா, விபத்தா என்பது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கெல்லாம் சட்டம் மீறப்படுகிறதோ அங்கு நிச்சயம் நடவடிக்கை உண்டு. மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற பேரணிகளை நடத்தும் போது பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவது குறித்து அரசியல் கட்சிகள் சற்றுச் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x