Published : 11 Feb 2017 03:12 PM
Last Updated : 11 Feb 2017 03:12 PM
பீட்டா அமைப்பிடமிருந்து ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ விருது பெறும் 2014 ஜல்லிக்கட்டு தடை முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜல்லிக்கட்டு ஆர்வலரான சாலை சக்கரபாணி என்பவர் ஜல்லிக்கட்டு தடை விதித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பீட்டா அமைப்பிலிருந்து ‘ஆண்டின் சிறந்த மனிதர்’ விருதைப் பெறுவதற்கு எதிராக மனு செய்திருந்தார். இதனையடுத்து உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதாவது இந்த விருதிற்காகத்தான் நீதிபதி ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பை பீட்டாவுக்கு ஆதரவாக பாரபட்சமாக வழங்கியுள்ளார் என்று சாலை சக்கரபாணி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில் முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் (பாதுகாப்பு) சட்டம், 1985 பிரிவு 3(1)-ஐ குறிப்பிட்டு நீதிபதியாக செயல்பட்ட காலங்களில் அவரது செயல்பாடுகளை எதிர்த்து சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
ஜல்லிக்கட்டு தடை கோரிய மனுவில் பீட்டா அமைப்பும் பிரதானமான அமைப்பு என்பதால் அந்த அமைப்பு தரும் விருது நீதிபதி ராதாகிருஷ்ணனின் ஜல்லிக்கட்டு தடை தீர்ப்பிலும் பாரபட்சமாக எதிரொலித்துள்ளது என்று சாலை சக்கரபாணி தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தான் அனுப்பியிருந்த நோட்டீஸில் இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 124(7)-ன் படி விருதைப் பெறுவது சட்ட மீறல் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு பதிலாக நீதிபதி ராதாகிருஷ்ணன் அரசமைப்பு சட்டப்பிரிவு 124(7) ஓய்வு பெற்ற நீதிபதி கோர்ட்டில் ஒருவர் சார்பாக ஆஜராவதையோ, எந்த ஒரு கோர்ட்டிலும் செயல்படுவதையோதான் தடை செய்துள்ளதே தவிர விருது பெறுவதை தடை செய்யவில்லை என்று தன் உச்ச நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மனுதாரர் சாலை சக்கரபாணி இந்திய அரசமைப்புச் சட்டம், பிரிவு 128-ஐ சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவரை தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நோட்டீஸை எதிர்த்து முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 13-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT