Published : 31 Dec 2013 12:00 AM
Last Updated : 31 Dec 2013 12:00 AM
இளம் பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனவரி 15-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அந்த செய்தியை வெளியிட்ட புலனாய்வு இணையதளமான குலைல் நிறுவன ஆசிரியர் ஆசிஷ் கேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குஜராத் மாநில அரசு நியமித்த 2 நபர் கமிஷன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில் அன்றைய உள்துறை இணையமைச்சர் அமித் ஷா மேற்பார்வையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார், பெண் பொறியாளர் ஒருவரை வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குஜராத் அரசு சார்பில் நவம்பர் 26-ம் தேதி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுக்னியா பட், கே.சி. கபூர் ஆகியோர் அடங்கிய அந்த கமிஷன் சார்பில் குலைல் இணையதள ஊடக ஆசிரியர் ஆசிஷ் கேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் ஆசிஷ் கேத்தன் கூறியதாவது:
குஜராத் விசாரணை கமிஷன் அனுப்பிய சம்மனை பெற்றுக் கொண்டுள்ளோம், வரும் 15-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அந்த சம்மனில் கோரப்பட்டுள்ளது. நாங்கள் வெளியிட்ட ஒலிநாடாக்களையும் சமர்ப்பிக்குமாறு கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. கமிஷனுக்கு பதிலளிப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பிலும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 26-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட உள்ள இந்த கமிஷன் 3 மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT