Last Updated : 20 Jul, 2016 12:01 PM

 

Published : 20 Jul 2016 12:01 PM
Last Updated : 20 Jul 2016 12:01 PM

தலித் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு: குஜராத்தில் பதற்றம் நீடிப்பு

தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இறந்த பசு மாடுகளின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் மீதான கடுமையான தாக்குதலைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்தில் நீதிகோரியும் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 8 பேரும், திங்கள்கிழமை 7 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தலித் அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று (புதன்கிழமை) அழைப்பு விடுத்திருந்த நிலையில், சவுராஷ்டிராவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதியில் மாநில பேருந்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் மட்டும் போராட்டக்காரர்களால் சுமார் 15 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்தப் போராட்டம் வலுத்து வருவதால், சவுராஷ்டிரா நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்களை குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதேவேளையில், தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை குஜராத் டி.எஸ்.பி. பி.பி. பாண்டே அமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் வரும் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்தது என்ன?

கடந்த 11-ம் தேதி தலித் இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியது. மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் வலுத்துள்ளன. திங்கள்கிழமை இரவு குஜராத் மாநில அரசுப் பேருந்துகள் கோண்டால் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டன. அதுதவிர தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரேந்திரநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டுத் தோல்களை குவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை முயற்சி:

இதற்கிடையில், திங்கள் அன்று காங்கிரஸ் கட்சி உள்ளூர் பிரமுகர் அனில் மதாத் உள்ளிட்ட 7 பேர் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டனர். நேற்றும் 8 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோரி போராட்டங்கள் தொடர்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x