Published : 03 Nov 2013 07:53 PM
Last Updated : 03 Nov 2013 07:53 PM
தேர்தலின்போது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிப்பதற்கு, காங்கிரஸ் சம்மதம் தெரிவித்ததை, எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
தற்போது உள்ள சட்டப்படி, தேர்தல் அட்டவணை அறிவிப்புக்கும், இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கும் இடையில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரம் முன்பு வரை தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட சட்டம் அனுமதி அளிக்கிறது.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது பத்திரிகைகளிலும், மின்னணு ஊடகங்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்களைத் திசைத்திருப்பக் கூடியவை என்பதால், அவற்றை வெளியிடுவதற்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் தொடங்கி, இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருந்தது.
அத்துடன், இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில், தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரையைத் தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு ஆதரவாக, கருத்துக் கணிப்புகளிக்கு தடை விதிக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமது கட்சியின் நிலைப்பாட்டை, தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் அனுப்பியிருக்கிறது. அதில், தோராயமாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், தவறுகள் நிறைந்திருக்கிறது என்றும், நம்பகத்தன்மை முற்றிலும் இல்லை என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சில நேரங்களில் திரித்தும் முடிவுகள் வெளியிடப்படுகின்றன என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மேலும், தற்போது எடுக்கப்பட்டு வரும் தேர்தல் கருத்துக் கணிப்புகள் அறிவியல் பூர்வமனதாக இல்லை என்றும், அவற்றில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சட்டதுறை செயலாளர் கே.சி.மிட்டால் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங். மீது சாடல்
தேர்தல் கருத்து கணிப்பு தொடர்பான தன் நிலைப்பாட்டை காங்கிரஸ் மாற்றிக்கொண்டது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி அளித்த பேட்டியில், "நீண்ட காலமாகவே தேர்தல் கருத்து கணிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இப்போது கூறுகிறது.
அவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும்போது, தேர்தல் கருத்துக்கணிப்பை வரவேற்றனர். இப்போது, அவர்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்பட்டுள்ளது" என்றார் ரூடி.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறும்போது, "சமீப காலமாக வருகின்ற கருத்துக் கணிப்புகள் குறித்து வருத்தம் கொள்ள காங்கிரஸுக்குக் காரணம் இருக்கிறது. காங்கிரஸ் வீழ்த்தப்படும் என்று சொல்வதாலேயே கருத்துக் கணிப்புக்குத் தடை விதிக்கக் கோருகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும்" என்றார் டி.ராஜா.
ராஜஸ்தான், டெல்லி, மத்தியஒ பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரத் தொடங்கியுள்ள தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கு பாதகமாகவே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அவசர அவசரமாக தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிப்பதற்கு ஆதரவான முடிவை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அனுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT