Published : 02 Oct 2013 10:27 AM
Last Updated : 02 Oct 2013 10:27 AM

அவசரச் சட்டம்: பிரதமரை சந்தித்து ராகுல் காந்தி விளக்கம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பதை தடுக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது, அவசர சட்டத்தை தான் எதிர்ப்பதற்கான காரணங்களை பிரதமரிடம் ராகுல் விவரித்ததாக கூறப்படுகிறது.

குற்ற வழக்கில் சிக்கி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் செய்யப்படாமல் காக்கும் வகையில் மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், அவசரச் சட்டம் முட்டாள்தனமானது என்றும், அதைக் கிழித்து எறிய வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியிருந்தார். பிரதமரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்தன.

இதனால், அமெரிக்காவில் இருந்து பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பிரதமர் ஆளானார். இதுகுறித்து பேசிய பிரதமர், ராகுல் காந்தியின் பகிரங்க கருத்துக்கு காரணம் குறித்து அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளவிருப்பதாக கூறியிருந்தார். மேலும் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர், இன்று ஜனாதிபதியையும் சந்திக்கிறார். அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை வாபஸ் பெறுவதா வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x