Published : 16 Jan 2014 09:40 AM
Last Updated : 16 Jan 2014 09:40 AM
பணியிலிருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்கென்று தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண் வழக்கறிஞரின் புகார் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2012-ம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஸ்வதந்தர் குமார், அப்போது பயிற்சி வழக்கறிஞராக இருந்த தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நிர்வாகத்தை அவர் அணுகினார். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றக் குழு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குறித்த புகாரை விசாரிக்க இயலாது என கடந்த டிசம்பர் 5-ம் தேதி அறிவித்துள்ளதை நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அந்த பெண் வழக்கறிஞர், டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பணியிலிருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதான புகாரை விசாரிக்க தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சம்பவம் நடந்தபோது, ஸ்வதந்தர் குமார் பணியிலிருந்தார் என்பதை கவனத்தில் கொண்டு, விசாகா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறியிருப்பதாவது: “இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம். வழக்கின் இந்த நிலையில் கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார், உச்ச நீதிமன்ற பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கும் நடுநிலை அறிவுரையாளர்களாக மூத்த வழக்கறிஞர்கள் பாலி எஸ். நரிமன், கே.கே.வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற விசாரணைக்கு உதவும்படி அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதியை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறுகையில், “நீதிபதி ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு கூட புகார் தெரிவிக்கலாம். எனினும், சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளாக புகார் தெரிவிக்காமல் அந்த பெண் வழக்கறிஞர் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு, அந்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே கூறுகையில், “இதுபோன்ற பாலியல் புகாரை விசாரிப்பதற்கான அமைப்பை உச்ச நீதிமன்றம் உருவாக்கினால், குற்றம் நிகழ்ந்த உடனேயே புகார் தெரிவிக்க பாதிக்கப்பட்டவர்கள் முன் வருவார்கள். சம்பவம் நடந்து எத்தனை நாள்களுக்குள் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற வரையறையையும் நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்யவுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - பி.டி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT