Published : 07 Feb 2014 10:00 AM
Last Updated : 07 Feb 2014 10:00 AM

தெலங்கானா: 4 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்- அரசு பணிகள் ஸ்தம்பித்தன

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதிகளில் உள்ள சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசுப் பணிகள் முற்றிலுமாக ஸ்தம்பித்தன.

ஆந்திர சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்ட தெலங்கானா மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என வலியுறுத்தி, புதன்கிழமை நள்ளிரவு முதல் சீமாந்திராவில் உள்ள அரசு ஊழியர்கள் காலவ ரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீகாகுளம் முதல் சித்தூர் மாவட்டம் வரை உள்ள 13 மாவட்டங்களில் இந்த போராட்டம் மும்முரமாக தொடங்கி உள்ளது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

வியாழக்கிழமை காலை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து தங்களது அலுவலகங்கள் முன்பு மாநில ஒற்றுமையை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கண்டன ஊர்வலங்கள் , மனித சங்கிலி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

பணிக்கு சென்ற ஒருசிலரை அலுவலகங்களில் இருந்து வெளியேற்றி சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கிராமப் புறங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்கள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வரை அனைத்து அரசு அலுவலக ஊழியர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இவர்களுக்கு ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள் உட்பட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

குறிப்பாக வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 13 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் வெறிச்சோடின. சித்தூர் ஆட்சியர் அலுவலகத் துக்கு அங்கு பணியாற்றும் ஊழியர் சங்க நிர்வாகிகள் பூட்டு போட்டனர். இதனால் ஆட்சியர், இணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வர இயலாமல் போனது.

வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுகிழமை வரை சீமாந்திரா மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்களின் வீடுகள், அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர் சங்கத் தினர் அறிவித்துள்ளதால், அமைச்சர்கள், எம்.பிக்களின் வீடு, அலுவலகங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குழு வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.

சுமார் ஒரு மணி நேரம் நடை பெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, "நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும்" என்றார்.

எனினும், சீமாந்திரா பகுதி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தை தொடர்வதாகக் கூறிய அவர், மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆந்திரத்தைப் பிரிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்ட நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள் குழுவை புதன்கிழமை சந்தித்த சீமாந்திரா பகுதி அமைச்சர்கள், ஐதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் வருமானத்தை தெலங்கானா, சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அமைச்சரவை சிறப்புக்கூட்டம்

தெலங்கானா மசோதா குறித்து பரிசீலிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x