Published : 17 Mar 2017 10:18 AM
Last Updated : 17 Mar 2017 10:18 AM

ஆந்திர சட்டப்பேரவையில் சர்ச்சை பேச்சு: ரோஜாவை மேலும் ஓராண்டு சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை

ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து நடிகை ரோஜாவை மேலும் ஓராண்டு சஸ்பெண்ட் செய்ய சபாநாயகருக்கு பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று சிபாரிசு செய்தது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மகளிர் அணி தலைவியாகவும், நகரி சட்டமன்ற உறுப்பினராகவும் ரோஜா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பெண் எம்எல்ஏக்களை அவமரியாதையாக பேசியதாக ரோஜா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் எம்எல்ஏவான அனிதாவை பேரவையில் ரோஜா தரக்குறை வாக விமர்சித்ததால் அவர் ஓராண்டு வரை பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

இது குறித்து பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவத்தன்று ரோஜாவின் விமர்சனங்களையும், அவர் நடந்துகொண்ட விதம் குறித்தும் வீடியோ ஆதாரங்களைச் சேகரித்து பேரவை ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. மேலும் தனித்தனியாக இரு பிரிவினரிடமும் விசாரணை மேற்கொண்டது.

இதில் ரோஜா தரக்குறைவாக பேசியது ஊர்ஜிதம் ஆனது. இதைத் தொடர்ந்து ரோஜாவை மேலும் ஓராண்டுக்கு பேரவை நிகழ்ச்சிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யலாம் என ஒழுங்கு நடவடிக்கை குழு சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் திற்கு சிபாரிசு செய்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.

இதுகுறித்து பேரவையில் நேற்று விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘உடல்நலக்குறைவால் பேரவை கூட்டத்துக்கு வர இயலவில்லை’ என ரோஜா கடிதம் எழுதியதால் இந்த விவாதம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x