Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM
பாலில் கலப்படம் செய்வது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து, அதற்குத் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் செயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தி பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்வது அதிகளவில் நடக்கிறது. கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதனைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு, பால் விற்பனை தொடர்பாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளன.
அருந்துபவர்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான பால் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். இருப்பினும் இத்தகு குற்றத்திற்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
இச்சட்டம் பால் கலப்படத்தைத் தடுக்கப் போதுமானதாக இல்லை. எனவே, கலப்படப் பால் விற்பனை செய்தால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொது வழக்கு ஒன்று இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், 2011-ம் ஆண்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மேற்கொண்ட மாதிரிப் பரிசோதனைகளில் நாடு முழுவதும் பரவலாக கலப்பட பால் மிக அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இத்தகவலின் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT