Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM
2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகள் வழங்கும் ரிசர்வ் வங்கியின் புதிய திட்டத்தால் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியுமே தவிர, கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று சென்னை ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு வாபஸ் பெறப்படும் என்றும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி நேற்று முன் தினம் அறிவித்தது. கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி பொதுமக்களிடயே எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
பணத்தை ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் நோட்டுகளாக 5 லட்சம், 10 லட்சம் என எடுத்துச்செல்வது எளிது. . 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக அவற்றை எடுத்துச் செல்வது கடினம். எனவே கறுப்பு பணம் பெரும்பாலும் 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுகளாகத்தான் வைக்கப்பட்டிருக்கும்
கள்ள நோட்டுகள் புழக்கம்:
இந்தியாவில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகின்றன, அவற்றுக்கு எந்த காகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகள் அறிந்துகொண்டு அவர்களும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து இந்தியாவுக்குள் புழக்கத்துக்கு விடுகிறார்கள். இதனால், இந்திய பொருளாதாரம் பாதிக்கப் படுகிறது. இந்நிலையில்
2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், அந்த நோட்டுகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப் படுகிறது.
ஆனால் இது அதற்கான நடவடிக்கை போல் தெரிய வில்லை. காரணம் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். எனவே, இது நோட்டு பரிமாற்றம்தான்.
பழைய நோட்டுகளை கொண்டு வரும்போது அதற்கான வருவாய் விவரங்களை யாரும் கேட்கப்போதில்லை. ஒருவர் குறிப்பிட்ட அளவு ரூபாய் நோட்டுகளைத்தான் மாற்ற முடியும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
கறுப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்திருந்தால், பணத்தை மாற்றிக்கொடுப்பதற்குப் பதிலாக அந்த பணம் அவரது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு கணக்கில் வரவு வைக்கப்படும்போது வருமான வரித்துறையினர் ஆய்வுசெய்வர்.
உண்மையில் கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க வேண்டுமானால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு களை ஒழிக்க வேண்டும். பொதுவாக, மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்தான். இந்தியாவில்கூட இதற்கு முன்பு 1960-களில் பெரிய தொகை நோட்டுகள் இதுபோன்று வாபஸ் பெறப்பட்டு இருக்கின்றன.
தற்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுகளை வேண்டு மானால் கட்டுப்படுத்த முடியும். 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் எவ்வளவு புழக்கத்தில் இருக்கின்றன? எவ்வளவு நோட்டுகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன? எவ்வளவு புதிய நோட்டுகள் அச்சடிக்கலாம்? என்பது குறித்த கணக்கெடுப்புக்கும் இது வசதியாக இருக்கும்.
எண்ணிக்கை அதிகமாகலாம்
ரிசர்வ் வங்கி 2005- ம் ஆண்டுக்கு முன்பு அச்சடித்த 500, 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக் கையைவிட அதிகப்படியான ரூபாய் நோட்டுகள் வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறு நிகழ்ந்தால் அது கள்ள நோட்டுகளின் தாக்கமாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT