Published : 21 Feb 2014 07:42 PM
Last Updated : 21 Feb 2014 07:42 PM
போபால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு, காங்கிரஸ் ஆர்வலர்கள் ரா.கா (ராகுல் காந்தியின் பெயர்ச் சுருக்கம்) பால் கடையை இன்று திறந்துள்ளனர். நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் பலர் மோடி தேநீர் கடைகளை திறந்து கொண்டிருப்பதால், அதை எதிர்கொள்ளும் விதமாக காங்கிரஸார் இப்படி ஒரு யோசனையை கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் மோனு சக்ஸேனா மற்றும் மனோஜ் சுக்லா ஆகியோரது தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய விநியோகத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்டோ டிரைவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் சூடான பாலை, ராகுல் காந்தி படம் பொறித்த பேப்பர் கப்பில் வழங்கினர். இது கூறித்து மோனு சக்ஸேனா கூறுகையில், "மோடி டீ என மக்களிடையே விஷப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, சமுதாயத்தைப் பிரிக்க முற்படுகின்றனர். அதை எதிர் கொள்ளும் விதமாகவே இளைஞர்களுடன் இணைந்து இந்த முயற்சியைத் துவங்கியுள்ளோம்" என்று கூறினார்.
பாஜக ஏற்கனவே மத்திய பிரதேசத்தின் ரயில் நிலையங்களில் இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகிறது. பல மூத்த பாஜக தலைவர்கள், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு கோரி, பொது மக்களுக்கு டீ விநியோகம் செய்தனர். நரேந்திர மோடியும், 'சாய் பே சர்ச்சா' (தேநீரோடு கலந்துரையாடல்) என்கிற திட்டத்தை ஆரம்பித்து, டீ கடைகளில் இருக்கும் வாக்களர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் உரையாடி, தன்னை பொதுமக்களின் நாயகனாக முன்னிறுத்தி வருகிறார்.
மேலும், பாஜகவின் மக்களவை உறுப்பினர்கள் குழு, 'துளசி யாத்திரை' மேற்கொள்ளவுள்ளனர். துளசி தூய்மையை அடையாளப்படுத்துவதால், வீடுதோறும் துளசி கன்றுகளை வழங்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி செய்த ஊழல்களை மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளனர்.
மோடியின் டீக்கடைகளை எதிர் கொள்ள, பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும், தன் பங்கிற்கு லாலு டீக்கடைகளை பிஹாரில் துவங்கியுள்ளார். காங்கிராஸார் துவக்கியுள்ள ரா.கா பால் கடை, காங்கிரஸின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் ஆரம்பித்துள்ள உள்ளூர் பிரச்சாரம் மட்டுமே. முன்னதாக மத்திய அமைச்சர் பேனி பிரசாத், மோடி டீக்கடைகளில் விநியோகிக்கப்படும் டீயில், மக்களை வசப்படுத்த போதை மருந்து கலந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT