Published : 07 Nov 2013 07:51 PM
Last Updated : 07 Nov 2013 07:51 PM
சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மற்றும் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரங்கள் குறித்து பேசுவீர்களா? என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரின் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடந்ததது.
கொண்டகான் நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜக ஆளும் மாநிலங்களில் நிர்வாகச் சீர்கேடு காணப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பாஜகவினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள், ஆனால் அவற்றில் எதையும் செயல்படுத்தமாட்டார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அமைதியாக செயல்திறனில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.
சோனியாவின் இந்தப் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில், கன்கர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "காங்கிரஸ் தலைமையிலான அரசு பேசுவதைவிட அமைதியாக செயல்படுவதில் நம்பிக்கை கொண்டுள்ளதாக 'மேடம்' (சோனியா காந்தி) கூறியுள்ளார்.
நீங்கள் (சோனியா) சொன்னது மிகவும் சரி. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் நீங்கள் சொல்லாமல் செய்தது. அதேபோல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலும் நீங்கள் சொல்லாமல் செய்ததுதான். பூமிக்கு அடியிலும், ஆகாயத்திலும் ஊழல் செய்துள்ளீர்கள். ஆனால், இதுபற்றி எதுவுமே நீங்கள் சொல்லவில்லை" என்றார் மோடி.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணவீக்கம் 100 நாள்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று கடந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், எதைச் சொன்னாலும் அதைச் செயல்படுத்துவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார்.
மேலும், பொய்யான வாக்குறுதிகளால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டனர். ஆனால் இப்போது அவர்கள் விழித்துக் கொண்டார்கள் என்றார் மோடி.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சாடிய மோடி, அவர் வறுமையின் வலி தெரியாமல் வறுமை பற்றி பேசி வருவதாகக் கூறினார்.
நிதிஷ் மீது குற்றச்சாட்டு
முன்னதாக, பாட்னாவில் குண்டுவெடிப்புக்கு மாநில அரசின் கவனக்குறைவு காரணமா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட பீகார் முதல்வர் நிதீஷ் மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT